'அட்டகத்தி' பா.இரஞ்சித்தின் எழுத்து, இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் பக்கா ஆக்ஷன், கமர்ஷியல் படம்தான் ''மெட்ராஸ்''. முன்பாதி படம் பழைய மெட்ராஸ் மாதிரி பளபளப்பாகவும், பரபரப்பாகவும், பின்பாதி இன்றைய சென்னை மாதிரி கலீஜாகவும், மெர்சலாகவும், நெர்சலாகவும், புரியதா புதிராய் இருப்பதும் தான் மெட்ராஸின் ப்ளஸ், மைனஸ்!
கதைப்படி, வடசென்னையின், பரபரப்பான ஏரியாவில் உள்ள ஒரு சுவற்றுக்காக ஒருகட்சியும், அதிலிருந்து பிரிந்து வந்த புதுக்கட்சியும் அடிக்கடி மோதிக் கொண்டு சில உயிர்களை பலி கொடுக்கின்றன. அதில் அதிகம் பலிக்கு உள்ளாவதும், பாதிப்பிற்குள்ளாவதும், புதிய கட்சியில் அதிகளவில் இருக்கும் அந்த ஏரியாவாசிகள் தான். இதில் மெர்சலாகும் அன்பு எனும் புதுக்கட்சியின் தீவிர தொண்டனான ஏரியாவாசி, தன் கட்சியின் ஏரியா தலைவர் கட்டளைப்படி குட்டி சுவற்றை தன் கட்சி சின்னம் வரைவதற்கு பயன்படுத்திக் கொள்ள சபதம் ஏற்கிறார்.
வேலை, காதல், காதலி, குடும்பம் என திரியும் அன்புவின் நண்பரும், ஹீரோவுமாகிய காளி எனும் கார்த்தி, சம்பந்தமில்லாமல் இவர்களது பாலிடிக்ஸில் தலையை விட்டு, எதிர்பாராமல் ஒரு கொலையை செய்வதுடன், நண்பன் அன்புவையும், விரோதிகளின் கொலைவெறிக்கு பலி கொடுக்கிறார். அதன்பின்னும் காதல், காதலி, குடும்பம் என மனதை தேற்றிக் கொள்ள முயலும் கார்த்திக்கு, ஒருகட்டத்தில் தான் செய்த கொலைக்காக சிறை செல்ல தயாரான அன்புவை கொன்றது விரோதிகள் அல்ல, கூடவே இருந்த துரோகி... என்பது தெரியவர, வில்லன்களை பழிவாங்க களம் இறங்கினாரா.? காதலியுடனான இல்வாழ்க்கை தான் பெரிதென இருக்கிறாரா.? இல்லை இரண்டிலும் வெற்றி பெறுகிறாரா.? என்பது க்ளைமாக்ஸ்!
கார்த்தி, காளியாக முன்பாதியில் காதலி, நட்பு, முட்டல், மோதல் என ஜாலியாக கவர்கிறார். பின்பாதியில் காளி அவதாரமாக ரசிகர்களை காலி செய்கிறார்(தியேட்டர் இருக்கையில் இருந்தும் தான்...)! காதலியுடன் அவர் கட்டிபிடி காட்சிகளிலும், முத்தமிடும் காட்சிகளிலும் காட்டும் ரொமான்ஸ் ஆகட்டும், நண்பனுக்கு ஒன்றென்றால் பதறும் வீரத்தில் ஆகட்டும், ஆக்ஷ்னில் குதித்து கண்மண் தெரியாமல் அதிரடியில் இறங்கும் காட்சிகளிலாகட்டும், அத்தனையிலுமே கார்த்தி புதியதொரு உயரத்தை 'மெட்ராஸ்' படத்தில் பூர்த்தி செய்திருக்கிறார் என்றால் மிகையல்ல! அதிலும் அதிரடியாய் எதி்ர்பாராது ஒரு கொலையை செய்யும் இருட்டு காட்சியில் மிரட்டியிருக்கிறார் மனிதர்! அதிலும் கார்த்தி, நார்த் மெட்ராஸ் பையனாகவே மாறி வாழ்ந்திருக்கிறார்.
''அப்ப நீங்க லவ் பண்ணலையா.?'' என தண்ணி பிடிக்கும் இடத்தில் கார்த்திக்கு 'கன்னி' வைக்கும் ஒரு காட்சி போதும் புதுமுக நடிகை கேத்ரீன் தெரஸாவின் நடிப்பாற்றலை பாராட்ட என்றாலும், ஒவ்வொரு காட்சியிலும் அம்மணி, அசத்தியிருக்கிறார் அசத்தி! அதிலும் கார்த்தியை அடிக்கடி இழுத்தனைத்து கொடுக்கும் முத்தக்காட்சிகளில், நம்மையும் அறியாமல் நாம் சீட் நுனிக்கு வந்துவிடுகிறோம் என்றால் பாருங்களேன்!
கார்த்திக்கு பார்க்கும் பெண்களை எல்லாம் நொட்டை, நொல்லை சொல்லிக் கொண்டு, ''வரம் பெற்று பெற்ற பிள்ளடா நீ...'' என்று கார்த்தியை பார்த்து அடிக்கடி சொல்லும் பாரதிராஜாவின் அறிமுகம் ரமா, வெற்றிலை காசுக்காக கார்த்திக்கு ஐஸ்வைக்கும் பாட்டி கேரக்டர், நண்பன் கேரக்டர் அன்பு, பெருமாள், கண்ணன், மாரி விஜி, ஜானி, புளூ பஸ் டான்ஸ் குழு, அன்புவின் மனைவி மேரி, பழைய ரவுடி ஜானி உள்ளிட்ட எல்லோரும் சபாஷ் சொல்லும் படி நடிப்பை வழங்கியுள்ளனர். அதிலும், போலீஸ் அடியால் லூசு தனமாக மெட்ராஸ் பாசையில் உதார் விடும் பழைய ரவுடி ஜானியின் நடிப்பும், துடிப்பும் பிரமாதம்!
சந்தோஷ் நாராயணின் இசையில், அந்த சாவு கானா... பாடலும், ''ஆகாயம் தீ பிடிச்சா...'' எனத் தொடங்கி தொடரும் பாடலும் சூப்பர்ப்! முரளி.ஜியின் ஒளிப்பதிவு, இருட்டிலும் மிளர்கிறது. பிரவினின் படத்தொகுப்பு முன்பாதியில் பாராட்டும்படியும், பின்பாதியில் படுத்தும்படியும் இருக்கிறது!
பின்பாதியில் ஒருசில குறைகள் இருந்தாலும், ''மெட்ராஸ்'' கதைகளை அழகாக சொல்ல, பா.இரஞ்சித்தை விட்டால் ஆளில்லை எனும் அளவில் இருக்கிறது 'அட்டக்த்தி' இரஞ்சித்தின் எழுத்தும், இயக்கமும்!
ஆகமொத்தத்தில், தொடர் தோல்விகளை தந்த கார்த்திக்கு முன்பாதி ''மெட்ராஸ்'' - புதிய ''அட்ரஸை'' தந்திருக்கிறது! பின்பாதி.?!!
விமர்சனம் - மெட்ராஸ்
'அட்டகத்தி' பா.இரஞ்சித்தின் எழுத்து, இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடித்து வெளிவந்திருக...
Post a Comment