பளிச்... பளிச்...
வனப்பகுதியை ஒட்டிய நிலங்களுக்கு ஏற்றது.
விற்பனைக்குக் கவலையில்லை.
விற்பனைக்குக் கவலையில்லை.
காய்கறிகள், நெல், வாழை, தென்னை... என சந்தையில்
எப்போதும் கிராக்கி இருக்கும் பலவிதமான பயிர்கள் இருந்தாலும்... மூலிகைப்
பயிர்கள் சிலவற்றுக்கும் நிலையான சந்தை இருக்கத்தான் செய்கிறது. விவரமறிந்த
விவசாயிகள்... துளசி, வெட்டிவேர், செங்காந்தல், கோலியஸ்... போன்ற மூலிகைப்
பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். இத்தகையப் பயிர்கள்,
பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருவதால்,
விற்பனை பற்றிய கவலையும் இல்லை. அந்த வகையில் 'கோலியஸ்' என்று
அழைக்கப்படும், மருந்து கூர்க்கன் கிழங்கை சாகுபடி செய்து வருகிறார்,
திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த
நாராயணமூர்த்தி.
விலங்குகள் தொல்லை... இல்லவே இல்லை!
காலை வேளையன்றில் தோட்டம் தேடிச் சென்ற நம்மை அன்போடு
வரவேற்ற, நாராயணமூர்த்தி, ''நான் விவசாயக் குடும்பத்தைச் சேந்தவன்தான்.
சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல பரிச்சயம் உண்டு. ஐ.டி.ஐ. முடிச்சுட்டு
பத்து வருஷம் வேலை பார்த்தேன். அதுல எனக்கு வருமானம் சரியா இல்லாததால,
குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த பத்து ஏக்கர் நிலத்துல விவசாயத்தை
ஆரம்பிச்சேன்.
அஞ்சு ஏக்கர் நிலம், மலையடிவாரத்துல இருக்கு. இதுல...
கரும்பு, கடலைனு எந்தப் பயிர் செஞ்சாலும், காட்டுப்பன்னிங்க வந்து
அழிச்சுடும். அதுகள்ட்ட இருந்து எப்படி வெள்ளாமையைக் காப்பாத்துறதுனு
பலர்கிட்டயும் யோசனை கேட்டப்போதான், 'கோலியஸ் கிழங்கைப் போட்டா ஆடு, மாடு,
பன்றி மாதிரியான விலங்குகள் தொல்லை இருக்காது’னு சொன்னாங்க. அதுபத்தி
விசாரிச்சு, தனியார் கம்பெனி மூலமா விதைத் தண்டு வாங்கிட்டு வந்து நடவு
செஞ்சேன்.
ஒப்பந்த முறை சாகுபடி!
'மூலிகைப்
பயிர்... எப்படி வருமோ?’னு கொஞ்சம் சந்தேகம் இருந்ததால, ஒரு ஏக்கர்ல
மட்டும் சோதனை முயற்சியா போட்டேன். ஆறு மாசத்துல 6 டன் மகசூல் கிடைச்சுது.
35 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. அதுலிருந்து ஆறு வருஷமா தொடர்ந்து
சாகுபடி செய்றேன். ஒரு கம்பெனிகிட்ட ஒப்பந்தம் போட்டிருக்கறதால, விற்பனையில
பிரச்னை இல்லை. சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமா இருந்தாலும்... ஒப்பந்தம்
போட்டபடி எனக்கு விலை கிடைச்சுடுது'' என்றவர், சாகுபடிப் பாடத்தை நடத்த
ஆரம்பித்தார்.
ஆவணி, ஐப்பசி பட்டங்கள் ஏற்றவை!
'கோலியஸ் கிழங்கின் சாகுபடிக் காலம், 6 மாதங்கள்.
வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இருமண் பாங்கான நிலங்கள் ஏற்றவை. ஆவணி
மற்றும் ஐப்பசி பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இந்தப் பட்டங்களில் சாகுபடி
செய்தால்... மழையால் பாதிக்கப்படாது.
ஏக்கருக்கு 18 ஆயிரம் விதைத்தண்டு!
கோலியஸ் நடவு செய்ய, ஏக்கருக்கு10 டன் என்கிற கணக்கில்
நிலத்தில் எருவைப் போட்டு உழுது, புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு,
அடியுரமாக 250 கிலோ ஜிப்சம், 100 கிலோ காம்ப்ளக்ஸ், 100 கிலோ வேப்பம்
பிண்ணாக்கு, 5 கிலோ குருணை மருந்து ஆகியவற்றை கலந்து நிலத்தில் தூவி உழவு
செய்ய வேண்டும். பிறகு, ஓர் அடி இடைவெளியில், இரண்டடி பார் ஓட்ட வேண்டும்.
10 லிட்டர் தண்ணீரில், 50 கிராம் அசோஸ்பைரில்லத்தை கலந்து, அதில்
விதைத்தண்டுகளை நனைத்து, ஒன்றே கால் அடிக்கு ஒரு விதைத்தண்டு வீதம் நடவு
செய்யவேண்டும். ஏக்கருக்கு 18 ஆயிரம் விதைத்தண்டுகள் தேவைப்படும்.
2 முறை மட்டும்தான் களை எடுக்க வேண்டும்!
நடவு செய்யும் போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு
நடவு செய்து, 3-ம் நாளில் உயிர் தண்ணீர் கட்டவேண்டும். அதன் பிறகு, வாரம்
ஒரு தண்ணீர் கட்டினால் போதும். 10-ம் நாளில் வேர் பிடித்து வளர
ஆரம்பிக்கும். 25 மற்றும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். கையோடு...
காம்ப்ளக்ஸ், சூப்பர்- பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய உரங்களில் தலா 50 கிலோ
வீதம் கலந்து, ஒவ்வொரு செடியின் அடிப்பகுதியிலும் கையளவு வைத்து, மண்
அணைக்க வேண்டும். அதன்பிறகு, களை எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால்...
கிழங்குகள் வெட்டுப்பட்டு விடும்.
நடவு செய்த 60, 90, 120 மற்றும் 150-ம் நாட்களில்... 50
கிலோ பொட்டாஷை, பாசனத் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். 90-ம் நாளுக்கு
மேல் நூற்புழுக்கள் மற்றும் வேறு ஏதாவது பூச்சிகளின் தாக்குதல் இருந்தால்,
பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
180-ம் நாளில் அறுவடை!
45-ம் நாளுக்கு மேல் பக்க வேர்கள் வளர்ந்து, 60-ம்
நாளுக்கு மேல், கிழங்காக மாற ஆரம்பிக்கும். 165 முதல் 180 நாட்களுக்குள்
அறுவடைக்குத் தயாராகி விடும். தரையில் இருந்து அரையடி அளவு விட்டு, மீதம்
இருக்கும் தழைப் பகுதிகளை அறுத்து அப்புறப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு
ஏர் அல்லது டிராக்டரில் கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்து, கிழங்குடன்
இருக்கும் அடித்தண்டைச் சேகரித்து, கிழங்கு மற்றும் அடித்தண்டு ஆகியவற்றை
தனித்தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.'
ஏக்கருக்கு ஒரு லட்சம்!
நிறைவாக... மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசிய
நாராயணமூர்த்தி, ''ஒவ்வொரு செடியிலயும், அரை கிலோ முதல் ஒண்ணரை கிலோ வரை
கிழங்குகள் கிடைக்கும். ஏக்கருக்கு சராசரியா 8 டன் கிழங்கு மகசூலா
கிடைக்கும். கூடவே 2 டன் அளவுக்கு அடித்தண்டும் கிடைக்கும். ஒரு டன்
கிழங்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம், 8 டன் கிழங்குக்கு 96 ஆயிரம் ரூபாயும்;
ஒரு டன் 2 ஆயிரம் ரூபாய் வீதம் 2 டன் அடித்தண்டுக்கு 4,000 ரூபாயும்
கிடைக்கும். மொத்தம் 1 லட்சம் ரூபாய். இதுல செலவு போக, 77 ஆயிரத்து 500
ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்று கணக்கு வழக்குகளைப் போட்டுப் பார்த்துச்
சொன்னார் சந்தோஷமாக!
இயற்கை முறை சாகுபடியே சிறந்தது!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலிகைத்துறை பேராசிரியரான ராஜாமணி, 'கோலியஸ்' கிழங்கு பற்றி நம்மிடம் பகிர்ந்த தகவல்கள்:
''கோலியஸ் கிழங்கு, 'லேமினேசியே’ குடும்பத்தைச்
சேர்ந்த, இந்திய வகை மூலிகைப்பயிர். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இதை
உணவாகப் பயன்படுத்துகின்றனர். இதைச் சாகுபடி செய்வதற்கேற்ற தட்பவெப்ப நிலை
தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதால், இங்கே 4 ஆயிரம் ஏக்கரில் இந்த கிழங்கு
உற்பத்தி செய்யப்படுகிறது. கோலியஸ் உற்பத்தியில், இந்தியாவிலேயே
தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதிலிருந்து 'ஃபோர்ஸ்கோலின்’
என்கிற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, மேற்கத்திய நாடுகளில்
ஆயுர்வேத மருத்துவ முறையில், உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தவிர, கண் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
நூற்புழுக்களைத் தடுக்கும் செண்டுமல்லி!
கோலியஸ் என்பது மூலிகைப் பயிர் என்பதால், முழுக்க
முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்வதுதான் நல்லது. கோலியஸை கொள்முதல்
செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களும் அதைத்தான் விரும்புகின்றன. இயற்கை
முறையில் சாகுபடி செய்யும்போது ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம், 150
கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிட
வேண்டும். இப்படிச் செய்தால், நூற்புழுத் தாக்குதலைக் குறைப்பதோடு,
செண்டுமல்லி மூலமாகவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம்
சி.எப்-36 என்ற ரகத்தை வெளியிட்டுள்ளோம். இந்த ரகத்தில் பூச்சி, நோய்
தாக்குதல்கள் குறைவதோடு, அதிக மகசூலும் கிடைக்கும்'' என்று சொன்ன ராஜாமணி,
ஒப்பந்தமுறை சாகுபடியில் கவனம்...
''கடந்த ஐந்தாண்டுகளில் காய்ந்த கோலியஸ் கிழங்கு, ஒரு
கிலோ 100 முதல் 125 ரூபாய் வரைதான் விற்பனை ஆகியிருக்கிறது. இந்த ஆண்டு,
ஒரு கிலோ காய்ந்த கிழங்கு 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன்
அடிப்படையில் விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சைக் கிழங்குக்கு
12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து
கொண்டு சாகுபடி செய்வது சிறந்தது. இதுதான் உறுதியான விலை, பயிர் காப்பீடு,
மானியம் போன்றவை கிடைக்க உதவியாக இருக்கும்'' என்கிற எச்சரிக்கைத்
தகவல்களையும் தந்தார்.
தொடர்புக்கு,
நாராயணமூர்த்தி,
செல்போன்: 94446-81925
மூலிகைத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தொலைபேசி: 0422-6611365.
நாராயணமூர்த்தி,
செல்போன்: 94446-81925
மூலிகைத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தொலைபேசி: 0422-6611365.
-vikatan-
ஒரு ஏக்கர்... 5 மாதம்... 77 ஆயிரம் லாபம்... கோலியஸ் கிழங்கில் குஷியான வருமானம் ! காசி.வேம்பையன், ரா. ராபின் மார்லர் 77 thousand profit in one acre
பளிச்... பளிச்... வனப்பகுதியை ஒட்டிய நிலங்களுக்கு ஏற்றது. விற்பனைக்குக் கவலையில்லை. காய்...
Post a Comment