சாயம்
போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும்
அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த
குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி
ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப்
போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:
ராம் ஜெத்மலானி!
ராம் ஜெத்மலானியின் நெருங்கிய நண்பரின் மகள் நளினி
கேரா. இவர் ராம் ஜெத்மலானியின் அதிகாரபூர்வமான வரலாற்றை எழுதி இருக்கிறார்.
ஏராளமான ரகசியத் தகவல்கள் உள்ளடக்கிய புத்தகம் அது.
1998-ம் ஆண்டு அமைந்த பி.ஜே.பி கூட்டணியில்
அ.தி.மு.க-வும் இடம்பெற்றது. அப்போது பி.ஜே.பி-யில் இருந்த ராம் ஜெத்மலானி
தனக்காக சட்டத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார். ஆனால், அதை
தம்பிதுரைக்கு வாங்கிக் கொண்டார் ஜெயலலிதா. ''அப்போது ராம் ஜெத்மலானிக்கு
சட்டத் துறை அமைச்சகம் கிடைக்காமல் போனதற்கு ஜெயலலிதாதான் காரணமா என்று
தெரியாது. அந்தப் பதவியை தன்னுடைய கட்சி உறுப்பினரான தம்பிதுரைக்கு ஜெ.
கேட்டார். அவர் மீது எண்ணற்ற ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலே சிறையில்
வைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய நலன்களைக் காக்கக் கூடிய ஒருவரை
அமைச்சரவையில் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவர விரும்பினார்'' என்று நளினி
கேரா எழுதுகிறார்.
இதன்பிறகு ஜெயலலிதா - ராம் ஜெத்மலானி மோதல் தொடர்கிறது.
கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மத்திய அமைச்சர்கள் மீது தொடர்ந்து
குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக வைத்தார் ஜெயலலிதா. அதில் ஜெத்மலானியும்
அடக்கம். 'ஃபெரா’ விதிகளை மீறி ராம் ஜெத்மலானி இரண்டு லட்சம் டாலர்
அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அதனை அமலாக்கத் துறை விசாரித்ததாகவும்
அவரைப் பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா அறிக்கை
வெளியிட்டார்.
அப்போது ராம் ஜெத்மலானி, 'சில பேர் சிறையைவிட்டு வெளியே
வரும்போது பணிவு மற்றும் நற்குணம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலும்
சிலர் ஆணவம் மற்றும் பொறுப்பின்மை கொண்டவர்களாக மாறி நல்லவற்றையும்
தீயவற்றையும் வேறுபடுத்த முடியாமல் செயல்படுகிறார்கள். என்னைப் பற்றி
இப்படி ஓர் அறிக்கை வெளியிட ஜெயலலிதா யார்? என்னுடைய சுய கௌரவத்தைத் தாக்க
அவர் யார்?'' என்று பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பகிரங்கமாகக் கேட்டார்.
மத்திய சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை, தமிழகத்தில்
அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்தார். அப்போது மத்திய
அமைச்சர் ராம் ஜெத்மலானி என்ன செய்தார் என்பதும் இந்தப் புத்தகத்தில்
வருகிறது: ''இதற்கு எதிராக ராம் கடுமையான எதிர்வினை ஆற்றினார். ஒரு
கூட்டாளிக்காக நீதித் துறையின் அதிகாரத்தைக் குறைப்பது தவறு என்றார்.
அட்டர்னி ஜெனரல் சொராப்ஜி அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அவர்
தடுக்காமல் போனதற்கு அவருக்கென்று சொந்தக் காரணங்கள் இருந்தன’ என்று ராம்
உறுதியாக நம்பினார். தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின்
கோரிக்கையை பிரதமர் ஏற்கக் கூடாது என்று ராம் தீவிரமாக வாஜ்பாய்க்கு
வலியுறுத்தினார். அ.தி.மு.க-வைக் கூட்டணியைவிட்டு வெளியேற்ற வேண்டும்
என்றும் சொன்னார். மே 14 அன்று மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று உச்ச
நீதிமன்றம் அறிவித்தது ராமின் முந்தைய முடிவு சரி என்பதை நிரூபித்தது''
என்கிறது அந்தப் புத்தகம்.
அதாவது ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க
அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்காக பி.ஜே.பி
அரசாங்கத்தில் பகீரத பிரயத்தனங்கள் செய்த ராம் ஜெத்மலானிதான் 15 ஆண்டுகளில்
பெரும் பல்டி அடித்துவிட்டார்.
ஃபாலி நாரிமன்!
இதற்கு மத்தியில், தங்களை வழக்குகளில் இருந்து
விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
செய்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் ஜெயலலிதா. வழக்கு
போட்டது சரிதான் என்று அன்றைய தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில்
வாதாடியவர் ஃபாலி நாரிமன். அப்போது தம்பிதுரையின் உத்தரவைக் கடுமையாக
விமர்சித்து ஃபாலி நாரிமன் வாதிட்டார்.
''மத்திய அரசு இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கும்
முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெறவில்லை. எனவே, இது
சட்டவிரோதமானது. மேலும், தனி நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள
ஜெயலலிதாவின் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது'' என்று நாரிமன்
வாதிட்டார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துகர்
மிகக் கடுமையான தீர்ப்பினைக் கொடுத்தார்கள்.
ஒரு வழக்கறிஞர் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடலாம்.
அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால், ஒரே வழக்கில் எதிரும்புதிருமாக
வெவ்வேறு காலகட்டத்தில் வாதாடுவது தார்மீக நெறியா? தமிழக அரசின் ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பிலும் ஆஜரான நாரிமன், அந்தத் துறை
தாக்கல் செய்த வழக்கில் தண்டனை பெற்றவருக்காகவும் வாதாடுவது எத்தகைய
முன்னுதாரணம்? தனது மகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது அதே
நீதிமன்றத்தில் அப்பா வாதாடுவது தார்மீக மரபும் அல்லவே. ஃபாலி நாரிமன்
காட்டியது பழுதான பாதை அல்லவா?
சோ!
''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எத்தனையோ
சாதனைகளைச் செய்திருக்கிறோம். அதை எல்லாம் மக்களிடம் முறையாக எடுத்துச்
சொல்லவில்லை'' என்று ஜெயலலிதா சொல்லியதைக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர்
கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு இந்த மனக்குறை தேவை இல்லை. அந்த
சாதனையைத்தான் பல வழக்குகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே''
(துக்ளக் 13.8.97 - பக் 14) என்று பதிலளித்தார் சோ.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும்
நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம்
முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று
தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது
நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது''
(துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு
வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?''
என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல்
உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான்
செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது.
உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை
அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப்
பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று
குற்றம் சாட்டியவரும் சோ-தான். இப்படி 1995 முதல் 1999 வரையிலான
காலகட்டத்தில் அவர் எழுதிய தலையங்கம், கேள்வி பதில், நினைத்தேன்
எழுதுகிறேன், அட்டைப்பட கார்ட்டூன் என்று எடுத்துப் போட்டாலே பல பக்கங்கள்
போகும். ஆனால், சோ இன்று இந்த வழக்கை அரசியல் ரீதியாக மட்டும் பார்ப்பது
ஏனோ?
சுப்பிரமணியன் சுவாமி!
முன்னால் சொன்ன மூவரும் எதிர்ப்பக்கமாக இருந்து ஆதரவாய்
மாறியவர்கள் என்றால், சுப்பிரமணியன் சுவாமி ஆதரவாய் இருந்து எதிர்ப்பாய்
ஆனவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போதே அவர் மீது
வழக்குப்
போடவேண்டும் என்று அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு கொடுத்து அனுமதி
பெற்றவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதில்
சுவாமி உறுதியோடு இருந்தாரா?
1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க
ஆட்சியைப் பிடித்தது. 96 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்
நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின்,
அ.தி.மு.க சார்பில் ஜெயக்குமார், ஜனதா கட்சி சார்பில் சந்திரலேகா ஆகியோர்
போட்டியிட்டார்கள். திடீரென ஜெயக்குமாரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டு
சந்திரலேகாவை ஆதரித்தார் ஜெயலலிதா. ''இது ஜெயலலிதாவின் பெருந்தன்மையைக்
காட்டுகிறது. ஜெயலலிதாவை நான் என்றுமே தனிப்பட்ட முறையில் தாக்கியது
இல்லை'' என்று சொல்லி ஏற்றுக்கொண்டவர் சுவாமி. சந்திரலேகாவுக்கு ஆசிட்
தழும்பு மறையவில்லை. சுவாமிக்கு கோர்ட் காட்சிகள் மறந்திருக்காது. ஆனால்,
எல்லாம் மறைத்து அந்த ஆதரவை ஏற்றுக்கொண்டார்.
சுவாமி எந்த புகார்களைக் கொடுத்தாரோ அதே புகார்களை
வைத்து சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் முயற்சிகள் நடந்துவரும்போது,
அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு சுவாமியும் சந்திரலேகாவும் போனார்கள்.
சந்திரலேகாவின் 50-வது பிறந்தநாளுக்கு (1997 ஜூலை 25) ஜெயலலிதா சார்பில்
பொக்கே-யை சத்தியமூர்த்தியும் டி.எம்.செல்வகணபதியும் கொண்டுவந்து
கொடுத்தார்கள். சுவாமியின் 58-வது பிறந்தநாளுக்கு (1997 செப்டம்பர்)
வாழ்த்துச் சொல்ல அவர் அலுவலகத்துக்கே ஜெயலலிதா வந்தார். 98-ம் ஆண்டு
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மதுரை தொகுதியில் நின்று
வென்ற சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும் என்று கேட்டவர் ஜெயலலிதா.
வாஜ்பாய்தான் அதற்கு உடன்படவில்லை.
ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு
நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டபோது, ''ஜெயலலிதா மீது தமிழக அரசு
தொடுத்திருக்கும் வழக்குகள் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை. தமிழக அரசு
கூடுதல் நீதிபதிகளை நியமித்தது தவறு. ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ்
சிறப்பு நீதிபதிகளை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை'' என்று அறிக்கை
வெளியிட்டவர் சுவாமி. ஜெயலலிதாவுக்காகத்தான் டெல்லியில் டீ பார்ட்டி நடத்தி
இன்று தன்னுடைய பரம்பரை எதிரியாகக் காட்டிக்கொள்ளும் சோனியாவை அதற்கு
அழைத்து வந்தவரும் சுவாமி.
''ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு தண்ணி காட்டிய நீங்கள்,
இப்போது ஜெயலலிதாவிடம் சரணடைந்திருப்பது எதைக் காட்டுகிறது?'' என்று
கேட்டபோது, ''சாணக்கிய நீதியையும் பகவத் கீதையையும் நீங்கள் படிக்க
வேண்டும்'' என்று அறிவுரை சொன்னார் சுவாமி.
கிருஷ்ண பரமாத்மாவை இதைவிட வேறுயாரும் கிண்டலடித்திருக்க முடியாது!
-vikatan-
சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது! 4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!
சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்...
Post a Comment