'நியூட்டன்’...
இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக்
நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா
தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம்
தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப்
பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital
Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே
ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன்
ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச்
சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப்
புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வசதி என அப்போது அது
அதிநவீனம். அந்த நாட்களில் கவர்ச்சிகரமான தனது மேக்கிண்டோஸ் கணினிகளால்
மதிக்கப்பட்டிருந்த ஆப்பிள், சந்தையின் கவனத்தையும் நியூட்டனுக்கு
ஈர்த்தது. ஆனால், சாதனத் தயாரிப்பில் இருந்து, என்ன வகையான மென்பொருட்கள்
இருக்க வேண்டும் என்பது வரை நியூட்டன் சம்பந்தப்பட்ட அனைத்திலும்
ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது ஆப்பிள்.
90-களின் கடைசியில் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஸ்டீவ்
ஜாப்ஸ் மீண்டும் ஏற்றுக்கொண்டதும் செய்த முதல் வேலை நியூட்டனை இழுத்து
மூடியதுதான். 'நியூட்டன்’ அனுபவத்தில் இருந்து தெளிவான பாடங்கள்
கற்றுக்கொண்டு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட்,
அதைத் தொடர்ந்து தீர்க்கமான திட்டங்களுடன் சீரான இடைவேளையில் ஒன்றன் பின்
ஒன்றாக ஆப்பிள் வெளியிட்ட மொபைல் சாதனங்கள், மனித இயந்திர இடையீடு (human
machine interaction) என்பதில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது.
முன்னோட்டம் முடிந்தது. இனி நிகழ்காலம்...
கடந்த வாரம் ஆப்பிளின் புதிய 'ஐபோன் மாடல் 6’ இந்தியா,
சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிளின்
வாழ்க்கையை 'ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முன்’, 'ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பின்’ என
எண்ணிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், ஜாப்ஸ் தலைமையில்
இருந்தவரை குறிப்பிடத்தக்க புதுமையாக்கங்களை, சிலிர்க்கவைக்கும் பயனீட்டு
அனுபவங்களை ஆப்பிள் சாதனங்களில் நிரப்பிக்கொடுக்கும் வித்தகராக இருந்தார்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஆப்பிளின் மொபைல் சாதன
வெளியீடுகளைப் பார்க்கும்போது விரக்தியே மிஞ்சுகிறது. ஏற்கெனவே இருக்கும்
சாதனங்களில், மிகச் சிறிய மேம்பாடுகளைக் கொண்டுவந்து, அவற்றைச்
சந்தைப்படுத்தி, பணம் ஈட்டுவதில் மட்டுமே ஆப்பிள் லயிப்புடன் இருக்கிறதோ
என்ற சலிப்பு தோன்றுகிறது.
மிகப் பெரிய அளவில் இருக்கும் இந்த 'iPhone 6 Plus’
சாதனத்தை பாக்கெட்டில் வைத்து அமர்ந்தால் வளைந்துவிடுகிறது என எழுந்த
பயனீட்டாளர் புகார்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னரும் எந்தப் பதிலும்
கொடுக்கவில்லை ஆப்பிள். சென்ற வாரத்தில், 'அப்படியெல்லாம் வளைவது அரிதிலும்
அரிது’ எனத் தட்டையான ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது ஆப்பிள். இந்த
நேரத்தில் 'ஐபோன் 4’ வெளியான சமயம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது
பொருத்தமாக இருக்கும்.
'ஐபோன் 4’ சாதனத்தைப் பயன்படுத்தி பேசும்போது சிக்னல்
துண்டிக்கப்பட்டுவிடுகிறது என்ற புகார், அந்த அலைபேசி வெளியான அடுத்த சில
நாட்களில் முணுமுணுக்கப்பட்டது. குடும்பத்துடன் விடுமுறையில்
சென்றிருந்த ஜாப்ஸ், உடனடியாக கலிஃபோர்னியா வந்து பத்திரிகையாளர்
சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், 'எல்லா போன்களையும் போலவே
ஐபோனிலும் சிக்னல் ட்ராப் ஆகலாம்’ என்பதை செய்முறை விளக்கமாகப்
புரியவைத்ததுடன், 'அலைபேசியின் மீது அணிந்துகொள்ளும் வகையில் ஆன்டனா ஒன்றை
ஆப்பிள் இலவசமாகக் கொடுக்கும்’ எனவும் அறிவித்தார். ஆப்பிளின் அந்த
'ஆட்டிட்யூட்’ இப்போது எங்கே?
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆப்பிள் ஐபோன்கள் தொடர்பான மிக முக்கியமான சர்ச்சை இது.
முதல் தலைமுறை ஐபோன் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.
ஆப்பிள் சாதனங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவதால் பல வருடங்களுக்கு முன்பு
இருந்த சாதனங்கள் உடைந்துவிடாமல் உறுதியான வடிவிலேயே இருக்கின்றன. ஆனால்,
ஆப்பிள் தொடர்ந்து வெளியிடும் iOS இயங்கு மென்பொருள் பழைய சாதனங்களின்
இயக்கத்தை வெகுவாகப் பாதித்து, முயல் வேகத்தில் இருக்கும் அலைபேசி
செயல்பாட்டை ஆமை வேகத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறது. புதுமையாக்கலில்
பெரிய மாற்றங்களை புதிய சாதனங்களில் கொண்டுவந்தபடி இருந்தால்,
பயனீட்டாளர்கள் இயல்பாகவே புதிய சாதனங்களுக்குச் செல்வார்கள். மிகச் சில
மேம்பாடுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் தங்களது பழைய சாதனங்களைத்தானே
தொடர்ந்து பயன்படுத்துவார்கள்? ஆனால், பழைய சாதனங்களை மாற்றான்தாய்
மனப்பான்மையுடன் நடத்தும் ஆப்பிள், அதை 'எக்ஸ்சேஞ்ச்’ முறையில்
பெற்றுக்கொண்டு புது சாதனங்களை விற்பதிலேயே முனைப்பாக இருக்கிறது.
இந்த மனப்பான்மை ஆப்பிள் நிறுவனத்தை எங்கே கொண்டுசென்று நிறுத்தும்?
ஆப்பிள் தனது கணக்கில் பில்லியன்களை
இடுக்கிவைத்திருக்கிறது. அதன் பொருட்கள் இன்றும் விரும்பியே
வாங்கப்படுகின்றன. ஆனால், புதுமையாக்கலில் அடுத்தபடிக்குச் செல்ல
முடியவில்லை என்றால், 'ஆப்பிள் என்று ஒரு நிறுவனம் இருந்தது’ என இன்றைய
சந்ததியினர், இனி வரும் சந்ததியினருக்கு சொல்லும் நிலையை நோக்கியே
செல்லும்!
என்ன பிரச்னை ஆப்பிள் போன்களில்?
ஆப்பிள் ஐபோன்
வாங்கி என்னதான் முறையாகப் பராமரித்தாலும், ஒன்று இரண்டு வருடங்களில்
காரணமே இல்லாமல் பிரச்னை செய்ய ஆரம்பிக்கும். அலைபேசி அடிக்கடி ஹேங் ஆகும்.
ஆரம்பத்தில் கில்லியாகத் துள்ளிய அப்ளிகேஷன்கள், நாளடைவில் மிக மெதுவாகத்
திறக்கும். சில அப்ளிகேஷன்கள் வேலையே செய்யாது. ஆப்பிள் போன்களை சர்வீஸ்
செய்ய முடியாது. புதிய போன்தான் வாங்க வேண்டும். காரணம், ஆப்பிளின்
லேட்டஸ்ட் மென்பொருட்கள் பழைய போன்களுக்கு செட் ஆகாது.
ஆப்பிளின் லேட்டஸ்ட் இயங்குமென்பொருள் ஐ.ஓ.எஸ்-8. இதை
ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்ய
முடியாது. ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களை
வைத்திருப்பவர்கள்தான் அப்டேட் செய்ய முடியும். அதனால், ஆப்பிள் 3 மற்றும்
ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் வேறு வழியே இல்லாமல், ஆப்பிள்
4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களைத்தான் வாங்க வேண்டும். ஆக, இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாற
வேண்டிய கட்டாயத்தை ஆப்பிள் உண்டாக்குகிறது.
ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது
குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின்
விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு
மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும்
என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட
போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை
செலவழிக்க வேண்டியிருக்கும்!
- சார்லஸ்
-vikatan-
-vikatan-
ஆப்பிள் போன் அதிர்ச்சி! அண்டன் பிரகாஷ்
'நி யூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், ...
Post a Comment