அன்புடன் அந்தரங்கம்!
வணக்கம் அம்மா,
என் வயது, 20; நான் கல்லூரி படிப்பை முடித்து, வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண். படிப்பில் பயங்கர கெட்டி; நான் படித்த பள்ளியில் சிறந்த மாணவி என்ற விருதை பெற்றவள்; நன்றாக கவிதையும் எழுதுவேன்.
பார்க்க சுமாராகவும், கண்ணாடி போட்டும் இருப்பேன். 'கோள் முஞ்சி, எப்போதும், 'உம்' என்று இருப்பாள்; சிரிக்க மாட்டாள்...' இவை எல்லாம், பிறர் என்னை பற்றி கூறியது. இதனால், என்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டானது. என்னுடைய பிரச்னை என்னவென்றால், திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், என்னுடைய வீட்டில் இன்னும் ஒரு ஆண்டில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்காக ஆண்களை பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். நானும் பல ஆண்களை, 'சைட்' அடித்தது உண்டு. இதெல்லாம், இனக் கவர்ச்சியாலோ அல்லது ஹார்மோன் செய்யும் மாற்றத்தாலோ வருவது தான். ஆனால், சற்று யோசித்தால் இவை எல்லாம் வாழ்க்கையில் அர்த்தமற்றவை என்று புரிகிறது.
திருமண வாழ்க்கையை விரும்பாததற்கு காரணம், நான் பிறருக்காக உதவ வேண்டும்; என் வாழ்க்கையின் ஒரு பங்கு, சமூக சேவையில் ஈடுபட்டு, அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். திருமணம் ஆனால், கணவர் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் என்று வாழ்க்கை சென்றுவிடும் அல்லவா... இதனால், என் சமூகத்திற்கு ஏதேனும் பயன் உண்டா?
அதனால், முதலில் ஒரு வேலையை தேடிக் கொண்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை முதியோர் இல்லத்திற்கோ அல்லது அனாதை இல்லத்திற்கோ அனுப்ப வேண்டும். அப்படி இல்லையெனில், ஏதேனும் ஒரு கருணை இல்லத்தில் வேலையில் சேர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
ஆனால், என் பெற்றோர், 'எங்கள் காலத்திற்கு பின் உனக்கு ஒரு துணை வேண்டும்; எவ்வளவு காலம் நீ தனியாக, இந்த மோசமான உலகில் வாழ்வாய்? அது மட்டுமல்லாமல், 30 வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்பினாய் என்றால் உன்னை யார் கல்யாணம் செய்து கொள்வர்...' என்று கேட்கின்றனர். இதற்கு என்னால் பதில் சொல்ல தெரியவில்லை. இவர்கள் கேட்பதும் நியாயம் தான்! இல்லற வாழ்க்கையில் விருப்பமில்லாத நான், வேறு ஒரு ஆண்மகனின் வாழ்க்கையை திருமணம் என்ற பெயரில் கெடுக்க விரும்பவில்லை.
நான் எடுத்திருக்கும் முடிவு சரிதானா... மிகவும் குழப்பமாக உள்ளது. முடிந்தளவு என் மனதில் உள்ளதை இக்கடிதத்தில் எழுதியுள்ளேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்புள்ள மகளுக்கு,
நல்ல வளர்ப்பும், ஆரோக்கிய சிந்தனை கொண்ட அனைத்து ஆண், பெண் குழந்தைக்கு இந்த வயதில் வரும் எண்ணம் தான் உனக்கும் வந்திருக்கிறது. 20 வயது என்பது மனதில் ஆக்கமும், ஏக்கமும், கனவும், கற்பனையும், சாதிக்கவும் துடிக்கும் வயது. இந்த வயதில் இப்படியெல்லாம் தோன்றாவிட்டால் தான் ஆச்சரியம். திருமணம் செய்தால், சமூக சேவை செய்ய முடியாது என்று யார் சொன்னார்கள்... நம் அக்கம், பக்கம், தெரு, சக மனிதர்கள் இவர்களிடம் காட்டும் கனிவும், பண்பும், நம்மால் முடிந்த சிறு உதவி கூட சமூக சேவைதான் மகளே...
நம் தமிழ் சமூகத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் குடும்ப வாழ்க்கைக்கு இல்லறம் என, ஏன் கூறுகின்றனர் தெரியுமா? 'இல்' என்றால் வீடு, 'அறம்' என்றால் தர்மம். ஆணும், பெண்ணும் குடும்பம் என்ற பந்தத்துக்குள் இணைந்து, இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய அறம் சார்ந்த வாழ்க்கையை தான் இல்லறம் என்றனர் நம் முன்னோர். அதனால், திருமணத்தையும், உன் சமூக சேவையையும் போட்டுக் குழப்பாதே...
உன் பெற்றோர் சொன்னது போல், 30 வயதுக்கு மேல் உனக்கு திருமண ஆசை வந்தால், உனக்கு ஏற்ற மணமகனை தேடுவது மிகவும் சிரமம். அப்போது, தனிமை உன்னுள் இன்னும் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும்.
மகளே... இந்த வயதில், நமக்குள் ஏற்படும் சிறு சிறு ஏமாற்றத்தினால் ஏற்படும் தாழ்வுணர்ச்சி கொடுக்கும் இயலாமையால், தத்துவங்கள் பேசலாம். ஆனால், காலம், நம் முடிவை தவறு என்று சுட்டிக்காட்டும் போது, நாம் எடுத்த முடிவுகள் எவ்வளவு முட்டாள்தனமானவை என்பது, அப்போது தான் புரியும். ஆனால், அப்போது நீ வருத்தப்படுவதாலோ, கண்ணீர் விடுவதாலோ உன் இளமையோ, காலமோ திரும்பி வராது.
உன்னைப் போன்ற புரட்சி பேசிய எத்தனையோ பெண்கள், 35-45 வயதில், யதார்த்த உலகத்திற்கு வந்து விடுவர். ரயிலை தவற விட்டுவிட்டோம் என்று வேதனிக்கின்றனர்; 'தனிமை வாட்டுகிறது. அன்பு செலுத்த ஆட்கள் இல்லையே...' என்று கண்ணீர் விடுகின்றனர். 'தாம்பத்ய சுகத்தை அனுபவிக்காமல் விட்டு விட்டோமே...' என்று மனம் கவலைப்படுகிறது. அப்போது அவர்களுக்கு, விதவன் மற்றும் வயோதிகனுக்கு இரண்டாம் தாரமாய் போகும் வாய்ப்பே கிட்டுகிறது. தாமத திருமணத்தில், பல எதிர்மறை விஷயங்களும் உள்ளன. மனித வாழ்க்கையின் அர்த்தமே உயிர் தொடர்ச்சிதான் என்பதை புரிந்து கொள்.
'சுமார் முஞ்சி, சோடாபுட்டி கண்ணாடி, உம்மணாம் முஞ்சி' இப்படி பிறர் உன்னை விமர்சிக்க விமர்சிக்க, உனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை குடியேறி விட்டது. அது தான், இல்லற வாழ்வுக்கு நீ ஏற்றவள் அல்ல என்கிற எண்ணத்தை ஆழ்மனதில் விதைத்து விட்டது.ஆனால், உள்ளுக்குள் சராசரி பெண்ணாகத்தான் இருக்கிறாய்; ஆண்கள் உன்னை ஈர்க்கவே செய்கின்றனர்.
மகளே... ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிப்படை உயிரியல் தேவைகள் உண்டு. அதை மறைத்து, சுருக்கிக் கொண்டு வாழ்பவர்கள் தான் போலி சாமியார்களாகவும், போலி சமூக சேவகர்களாகவும் நாட்டில் உலா வருகின்றனர். எல்லா பெண்களாலும், அன்னை தெரசாவாக மாற முடியாது. மில்லியனில் ஒரு பெண்ணுக்குதான் மனோதிடமும், சேவை மனப்பான்மையும் மேலோங்கி, உடல் தேவைகளும், பொருளாதார அவசியங்களும் பின்னுக்கு போகும்.
அதனால் மகளே... திருமணம் செய்து கொண்டு, கணவனுக்கு நல்ல மனைவியாகவும், குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும், பணி இடத்தில் சிறந்த பணியாளாக திகழ்வதும் கூட சமூக பங்களிப்பு தான். சம்பளத்தில் பத்து சதவீதத்தை, கணவனின் ஒப்புதலோடு, முதியோர் இல்லத்திற்கு, அனாதை இல்லத்திற்கு வழங்கலாம். பிறந்த நாளை, திருமண நாளை, கருணை இல்ல குழந்தைகளுக்கு விருந்து பரிமாறி கொண்டாடலாம். இரு தரப்பு பெற்றோரை அன்பாலும், பணத்தாலும் அரவணைக்கலாம். மறக்காமல் ஓட்டுப் போடலாம். வருமான வரியை ஏமாற்றாமல் கட்டலாம். சாலை விபத்தில் காயமுற்றவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றலாம். மதம் விதித்த கடமைகளை சரிவர நிறைவேற்றலாம். மொத்தத்தில் திருமணம் எதற்கும் தடைக்கல் அல்ல; உணர்ந்து செயல்படு.
— என்றெல்லாம் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49482-topic#ixzz3GGcfD8Qf
Under Creative Commons License: Attribution
அன்புடன் அந்தரங்கம்!
அன்புடன் அந்தரங்கம்! வணக்கம் அம்மா, என் வயது, 20; நான் கல்லூரி படிப்பை முடித்து, வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண். படிப்பில்...
Post a Comment