ஷிவானிக்கு
32 வயது. ஒரு பிரபல ஸ்பாவில் பியூட்டிஷியனாகப் பணியாற்றி வருகிறார்.
அவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் ஷிவானி, இரண்டாவது
முறையாகக் கர்ப்பமானார். முதல் பிரசவம்போல இல்லாமல், இந்த முறை அவரது
அன்றாட வாழ்க்கையையே பாதிக்கச் செய்துவிட்டது கர்ப்பம். எதைச்
சாப்பிட்டாலும், சாப்பிட நினைத்தாலும்... வாந்தி. அவரைப்
பாடாய்ப்படுத்தியது, மார்னிங் சிக்னஸ் எனப்படும் மசக்கைப் பிரச்னை.
பொதுவாக, 300 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு, மசக்கைப் பிரச்னை மிக மோசமாக
இருக்கும். இந்தக் காலத்தில் இடைவிடாத வாந்தி, உடல் நலக் குறைபாடு காரணமாக
கர்ப்பிணிகள், ஐந்து சதவிகிதம் வரை கூட உடல் எடையை இழக்கின்றனராம்.
''மசக்கைத்
தருணத்தில் பெண்கள், தங்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டால் போதும்...
எல்லாச் சவால்களையும் எளிதில் கடந்துவிடலாம்'' என்கிற சென்னை எழும்பூர்,
அரசு, தாய் - சேய் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் தமிழ்ச்செல்வி,
மசக்கைப் பிரச்னையைச் சமாளிக்கும் வழிமுறைகளைப் பற்றி விளக்கினார்.
'ஒரு கரு உருவான முதல் நாளிலிருந்து, 12 முதல் 14
வாரங்கள் வரை பெண்களுக்கு, 'மார்னிங் சிக்னஸ்’ உபாதைகள் இருக்கும்.
பொதுவாக, இது 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதப் பெண்களுக்கு வர
வாய்ப்புள்ளது. கருத்தரித்தவுடன் ஹார்மோன் மாறுதல்களால் இது
ஏற்படக்கூடியது. ஆனால், இந்தப் பிரச்னை, இன்ன காரணத்தால்தான் ஏற்படுகிறது
என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. காலையில் எழுந்தவுடன் குமட்டல்,
வாந்தி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். கர்ப்பக்
காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் இருப்பது இயல்புதான். எனவே, பயப்படத் தேவை
இல்லை.
பெரும்பாலும் சத்தான உணவை உட்கொள்வதன் மூலம், இந்த உபாதைகளைச் சமாளிக்கலாம்.
காரம், எண்ணெய், மசாலாப் பொருள்கள் இல்லாத, தங்கள்
உடலுக்கு ஏற்ற உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி வரும் வாந்தியால்
சாப்பிட்ட உணவு, நீர் வெளியேற்றப்படுவதால், உடலில் நீர்ச் சத்தும்
வைட்டமின் சத்தும் குறையும். அதிலும் மிக அவசியமான பி காம்ப்ளக்ஸ் சத்து
குறைந்து, உடல் சோர்வடையும். எப்போதையும் விட, அதிகமாகத் தண்ணீர் பருக
வேண்டும். தண்ணீரை மொத்தமாகக் குடிப்பதற்குப் பதில், கால் மணி நேரத்துக்கு,
ஒரு வாய் என்ற அளவுக்கு அருந்தலாம். போதுமான நீர்ச் சத்து இருந்தாலே,
குமட்டல் உணர்வு குறைந்துவிடும்.
வாந்தி வருவது போல் இருந்தாலோ, வாந்தி எடுத்துச்
சோர்ந்திருந்தாலோ... எண்ணெய் அதிகம் உள்ள உணவைத் தவிர்த்துவிட வேண்டும்.
வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் இருப்பவர்கள்... பெரும்பாலும் வெளியே
செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம்
இருந்தால், கையில் எப்போதும் தண்ணீர், புளிப்பு மிட்டாய் போன்றவற்றை
வைத்துக்கொள்ளலாம். சித்த மருந்துக் கடைகளில் ஆல்பகோடாப் பழமும் இஞ்சியில்
செய்த மெல்லக்கூடிய மாத்திரைகளும் கிடைக்கின்றன. இவற்றில் உள்ள புளிப்புத்
தன்மை, வாந்தி வருவதைக் கட்டுப்படுத்தும்.
மார்னிங் சிக்னஸ் அறிகுறிகள், அளவுக்கு அதிகமாகவோ, 14
வாரங்களுக்கு மேலாகவோ தொடர்ந்தால்... உடனடியாக மருத்துவரை அணுகி, ஆலோசனை
பெற வேண்டும். தினசரி வேலைகளைச் செய்ய, உங்கள் உடல் ஒத்துழைக்காதபோது,
மருத்துவர்களை அணுகுவது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை
முறையாகப் பின்பற்றுவதன் மூலம், எளிதில் மார்னிங் சிக்னஸைச் சரிசெய்து
விடலாம்' என்றார் டாக்டர் தமிழ்ச்செல்வி.
தாயின் நலத்தில்தான், சேயின் நலம் அடங்கியுள்ளது. நல்ல
உணவு முறை, ஆரோக்கியமான சிந்தனை மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டல்...
இவற்றைப் பின்பற்றினாலே, ஆரோக்கியமான அடுத்த தலைமுறையைப் பெற்றெடுக்கலாம்.
- ரெ.சு. வெங்கடேஷ்
மார்னிங் சிக்னஸிலிருந்து மீள...
காலை உணவுக்குப் பிறகு 11 மணியளவில் இளநீர், மோர் அல்லது பழங்களை உண்ணலாம்.
பழங்களை, ஜூஸாகக் குடிப்பதை விட, ஃப்ரெஷ் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
மதிய உணவுக்குப் பிறகு, அரை மணி முதல், ஒரு மணி நேரம் வரை தூங்க வேண்டும். இது உடல் சோர்வையும் குறைக்கும்.
வயிறு முட்ட சாப்பிடாமல், மூன்று வேளை உணவை ஐந்து முதல் ஆறு வேளையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
கடைகளில்
கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பண்டங்கள், துரித உணவுகள், வறுத்த, பொரித்த
உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செரிமானப் பிரச்னையும் குமட்டலை உண்டு
பண்ணும்.
இரவு சாப்பிட்ட பின், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் தூங்க வேண்டும்.
அவ்வப்போது நடைப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.
மசக்கை சமாளிக்கும் வழிகள்!
ஷி வானிக்கு 32 வயது. ஒரு பிரபல ஸ்பாவில் பியூட்டிஷியனாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில...
Post a Comment