ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவரா?: வெங்கையா நாயுடு பேட்டி
அப்பீலில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பை விமர்சிக்கக்கூடாது. அவர் முன்னாள் முதல்வர். பிரபலமானவர்.
ஜெயலலிதா முக்கிய அரசியல் கட்சியின் தலைவர். ஐகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட்டிலோ அப்பீலில் அவர் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாவிட்டால், அவர் வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டால் மீண்டும் அவர் முதல்-அமைச்சராக தகுதி உள்ளவர்.
மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய இருப்பது பற்றி எனக்கு தெரியாது. பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரி சபையை மாற்றம் செய்யும் அதிகாரம் உள்ளது. இது குறித்து பிரதமர் உரிய நேரத்தில் முடிவு செய்து மந்திரி சபையை விரிவாக்கம் செய்வார்.
ஐரோப்பிய நாடுகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது குறித்து எனக்கு தெரியாது. இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்குவது பற்றி மத்திய அரசு எந்தவித பரிசீலனையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்திய கட்டிடக் கலை நிபுணர்கள் சங்கத்தின் தென்மண்டல கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெங்கையா நாயுடு கூறியதாவது:-
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், பிரதமர் நரேந்திரமோடியின், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வரவேற்று பேசியது ஒரு சாதாரண விஷயம், ஆனால் அதற்காக காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்போது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு பல முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகியும் 68 சதவீதத்தினர் வங்கி கணக்கு தொடங்கவில்லை. ஆனால், பிரதமரின் ‘ஜன-தன் யோஜனா’ திட்டம் கொண்டு வந்து 5 வாரத்தில், 5 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர். இது ஒரு ஒளிமயமான தொடக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவரா?: வெங்கையா நாயுடு பேட்டி
ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவரா?: வெங்கையா நாயுடு பேட்டி அப்பீலில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா மீ...
Post a Comment