'இது பிரீமியம் சிறப்பு ரயில். முன்பதிவு நேரத்தில் கட்டணம் அதிகமாகும்’ - இப்படி, கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழுதி ஒரு ஸ்டார் குறியீடு வைக்கப்பட்டிருக்கிறது ரயில்வே ஆன்லைன் முன்பதிவு வெப்சைட்டான ஐ.ஆர்.சி.டி.சி-யில். 'அட... தீபாவளிக்கு முதல் நாள் டிக்கெட் நிறைய இருக்கே...’ என்ற சந்தோஷத்துடன் நீங்கள் முன்பதிவு செய்தால்... விமானத்தில் செல்வதைவிட கூடுதலான பணம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பறிக்கப்படும். மத்திய பி.ஜே.பி அரசால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது இந்தப் புதிய திட்டம்!
வழக்கமாக, பண்டிகை காலங்களில் பயணிகள்நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை வழக்கமான கட்டணத்தில் இயக்குவார்கள். இந்தமுறை அந்த சிஸ்டத்தை மாற்றிவிட்டு 'பிரீமியம் ரயில்கள்’ என்கிற பெயரில் கூடுதல் கட்டணத்தில் 96 ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது ரயில்வே துறை. இவற்றில் ஐந்து ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. இதுதவிர இனி எப்போதும் பிரீமியம் ரயில்கள் ஒவ்வொரு வழித்தடத்திலும் இயக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் சொல்கிறார்.
சேலத்தைச் சேர்ந்த ரயில் பயணி குப்புராஜ், ''ஆயுத பூஜைக்கு முந்தின நாள் எனது நண்பர் ஒருவர் வந்தார். நெல்லை டு சென்னைக்கு மூன்றடுக்கு ஏ.சி-யில் டிக்கெட் புக்கிங் செய்யச் சொன்னார். பிரீமியம் ரயிலில் மட்டும் இடம் இருந்ததால் நான் அதில் புக்கிங் செய்தேன். டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஒரு டிக்கெட் கட்டணமாக விலை 1,250 ரூபாய் என காட்டியது. நான் இரண்டு டிக்கெட் போட்டேன். இரண்டுக்கும் சேர்த்து 2,500 ரூபாய்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால், 6,600 ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டது. உடனே ரயில்வே துறைக்கு போன் செய்து கேட்டேன். 'நீங்க ரூல்ஸை படிக்கவில்லையா? அதில் தெளிவாகப் போட்டிருக்கோமே... போட்டது போட்டதுதான். இந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியாது’ என்று சொன்னார்கள். இது பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று அவர்களிடம் சத்தம் போட்டேன். 'இதையெல்லாம் பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள். நாங்கள் சாதாரண ஊழியர்கள்தான். ஏதோ நாங்க உங்க பணத்தை வீட்டுக்கு எடுத்துட்டுப் போற மாதிரி பேசுறீங்க...’ என்றார். இதை நான் டிக்கெட் போடச் சொன்ன நண்பரிடம் சொன்னபோது, சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் எவ்வளவோ சொல்லியும், 'ரெண்டு டிக்கெட்டுக்கும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல தர முடியாது’ என்று சொல்லிவிட்டார். என்ன செய்யுறது சொல்லுங்க...?'' என்று வேதனையோடு கேட்கிறார்.
பிரீமியம் ரயில் கட்டண உயர்வு பற்றி எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் என்.கண்ணையாவிடம் பேசினோம். ''தீபாவளி சமயத்தில் சில ஆம்னி பஸ்காரங்கதான் இப்படி செய்வாங்க. அவங்களையே மிஞ்சும் வகையில் ரயில்வே இந்த பிரீமியம் ரயில் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ரயில் கிளம்பும் நேரத்தையும் பயணிகளின் தேவையையும், காலியிடங்களையும் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட புரோகிராம் உதவியுடன் கம்ப்யூட்டரே கட்டணத்தை நிர்ணயம் செய்யும். இதற்கு, 'டைனமிக் கட்டணம் சிஸ்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தட்டுப்பாடுக்கு தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் 200 சதவிகிதம் வரை உயருமாம். இதுமட்டுமல்ல... ஏற்கெனவே ஒவ்வொரு ரயிலிலும் உள்ள மொத்த பயணிகளின் இருக்கைகளில் 50 சதவிகித இருக்கைகள் தட்கல் என்கிற பெயரில் கூடுதல் கட்டணத்தில் விற்கப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் தட்கல் டிக்கெட்டிலும் பாதியை பிரீமியம் தட்கல் என்று விற்கிறார்கள். இதிலும் பிரீமியம் ரயிலைப்போல டிக்கெட் தட்டுப்பாடுக்கு ஏற்ப கட்டணம் உயரும். இப்படியே போனால் எதிர்காலத்தில் சாதாரண மக்களுக்கு ரயில் பயணம் என்பதே கனவாகிவிடும்'' என்று சொன்னார்.
ராஜ்யசபா எம்.பி-யான திருச்சி சிவா, ''அரசின் சேவை துறைகள் என்கிற வரிசையில் ரயில்வே வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் வசதி, பாதுகாப்பையும் தாண்டி, செலவு குறைவானது என்பதால்தான் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல மடங்கு கூடுதல் கட்டணம் என்கிற வகையில் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது தவறு. அரசைப் பொறுத்தவரையில், லாபம் ஈட்ட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த கட்டண உயர்வை உடனே வாபஸ்பெற வேண்டும். இதுபற்றி மத்திய அரசிடம் நிச்சயமாகப் பேசுவேன்'' என்றார்.
தமிழகத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் இருவர், மத்திய ரயில்வே நிலைக்குழுவில் உறுப்பினர்கள். ஒருவர், மத்திய சென்னை நாடாளுமன்ற எம்.பி-யான எஸ்.ஆர். விஜயகுமார். இன்னொருவர், திருச்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி-யான ரத்தினவேலு. இருவரிடமும் நாம் பேசினோம். இருவரும் சொன்ன பதில் இதுதான்: ''ரயில்வே போர்டு மீட்டிங் டெல்லியில் நடக்கிறது. பிரீமியம் ரயில் கட்டண உயர்வு விஷயத்தில் தமிழக மக்களின் கடும் அதிருப்தியை நாங்கள் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!''
வாழ்க்கையில் போரடிக்காத விஷயங்களில் ரயில் பயணமும் ஒன்று என்பார்கள். அதை திகிலடிக்கும் பயணமாக மத்திய அரசு மாற்றிவிடக் கூடாது!
- ஆர்.பி.
ரயில் கொள்ளை ஜாக்கிரதை!
'இது பிரீமியம் சிறப்பு ரயில். முன்பதிவு நேரத்தில் கட்டணம் அதிகமாகும்’ - இப்படி, கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழ...
Post a Comment