பணம் இல்லாததால் இறந்த மகனை அடக்கம் செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்த தாய்
கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதியின் மகன் நவீன்குமார் (16).நவீன் குமாரின் சிறு வயதிலேயே தந்தை பிரிந்து சென்று விட்டார். வனிதா கஷ்டப்பட்டு உழைத்து மகனை வளர்த்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை செய்து வரும் வனிதா மகன் துணையோடு தனியாக வசித்து வந்தார்.
உழைத்து வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டு கொண்டிருந்த வனிதா குடும்பத்தில் நோய் வடிவில் எமன் புகுந்தான்.
திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மகன் நவீன்குமாரை கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நவீன் குமார் பரிதாபமாக இறந்தார்.
துணையாய் இருந்த மகன் பிணமாய் கிடந்ததை பார்த்து வனிதா கதறி அழுதார். பெற்ற மகனின் உடலை ஊருக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்குகள் செய்ய கூட பணம் இல்லாமல் அந்த ஏழைத்தாய் தவித்தார்.
நான் உயிரோடு இருந்தும் மகனே உனக்கு இறுதிச் சடங்குகள் செய்ய இயலாதவளாய் நிற்கிறேனே என்று உடைந்து நொறுங்கி அழுத வனிதாவை பார்த்து பலர் வருத்தப்பட்டனர்.
எத்தனை பேர் வருத்தப்பட்டு என்ன பயன்? அந்த ஏழைத்தாயின் ஆசை நிறைவேறவில்லையே.
பெற்ற மகன் உடலை அனாதை பிணம் போல் விட்டுச் செல்ல மனமில்லாமல் தவித்த வனிதா மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுத்தார். அதை தொடர்ந்து மருத்துவ கல்லூரியின் உடற்கூறு இயல் துறையினர் அவரது உடலை பெற்று சென்றனர்.
தனிமரமாய் தவித்த வனிதா கண்ணீர் மல்க கூறியதாவது:–
என் மகன் உடல் நிலை பாதித்ததும் பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தேன். மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. எல்லோரையும் அணுகினேன். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனக்கு ஒரே துணையாக இருந்த என் அன்பு மகனும் போய் விட்டான். இனி நான் எங்கே போவேன்? எப்படி வாழ்வேன் என்று தவித்த அந்த தாயின் கண்ணீர் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
-மாலைமலர்-
பணம் இல்லாததால் இறந்த மகனை அடக்கம் செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்த தாய்
பணம் இல்லாததால் இறந்த மகனை அடக்கம் செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்த தாய் கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரத...
Post a Comment