பூச்சிக்கொல்லி விஷம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது எண்டோசல்ஃபான்தான். அதைத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலவாறு போராடி வருகிற சூழ்நிலையிலும் இன்னமும் அதற்கு முழுமையாக தடை விதிக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும்தான் அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை விட கொடிய நஞ்சுகள் தற்போது விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் கொடுமையான உண்மை.
ஆம்... தொடு நஞ்சு, புகை நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, குடல் நஞ்சு என்ற வரிசையில் தற்போது நரம்பு நஞ்சு என்று சொல்லப்படுகிற நஞ்சைத்தான் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். இதனை ‘ஐந்தாம் தலைமுறை நஞ்சு’ என்று அழைக்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள். அதைப்பற்றி இங்கு விளக்குகிறார், பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம்...
''ஆரம்ப காலத்துல தொடு நஞ்சைப் பயன்படுத்தினாங்க. இந்த நஞ்சை செடியில தெளிச்சதுக்கப்பறம் அதைத்தொடுற பூச்சிகள் சுருண்டு விழுந்து செத்துப்போகும். அடுத்து புகை மூலமா பூச்சிகளுக்கு சுவாசப்பிரச்னை ஏற்படுத்தி கொன்னாங்க. அடுத்து ஊடுருவிப்பாயுற நஞ்சைக் கண்டுபிடிச்சாங்க. இது செடிகளுக்குள் ஊடுருவிப்பாயும். அந்த செடிகளைச் சாப்பிடுற பூச்சிகள் செத்துப்போகும். அடுத்து வந்த குடல் நஞ்சு, பூச்சிகளோட குடலுக்குள் புகுந்து செயலிழக்க வெச்சு சாகடிக்கும். இதுக்கெல்லாம் பூச்சிகள் கட்டுப்படாததால இப்போ பயன்படுத்திட்டுருக்கிற நஞ்சுதான், நரம்பு நஞ்சு. இதைத் தெளிக்கிறப்போ பூச்சிகளோட நரம்பு, தண்டுவடத்தைப் பாதிச்சு மூளையைப் பாதிக்க வைக்குது. இதனால பூச்சிகள் மண்டை குழம்பிப் போய் செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமப் போயிடுது.
குறிப்பாக, ஆண் பூச்சிகள் இனப்பெருக்கத்துல ஈடுபடுறதில்லை. அதனால பெண் பூச்சிகள் முட்டையிடாம சந்ததி பாதிக்கப்படுது. தேனீக்கள் கூட்டை விட்டு கிளம்பி தேன் சேகரிக்கப் போறப்போ இந்த நஞ்சை சாப்பிட்டுட்டா திரும்பி கூட்டுக்கு வர்ற வழியை மறந்துடுது. இப்படி கொத்துக்கொத்தா தேனீக்கள் அழியுற அபாயமும் இருக்கு. இந்த நஞ்சுகள் தெளிக்கப்பட்டு விளைவிக்கிற பொருட்களைச் சாப்பிடுறப்போ அதே கெடுதல்கள்தான் மனுசனுக்கும் ஏற்படும்.
ஆடு, கோழி, மாடு மூலமாவும் இது மனுசனுக்கு பரவும். மனுசனோட மூளை, நரம்புகள் இப்படி பாதிக்கப்பட்டா என்ன விளைவுகள் ஏற்படும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. ஏற்கனவே மத்த நஞ்சுகள் மூலமாவே ஏகப்பட்ட நோய்கள் பரவிட்டு இருக்கு'' என்று கொஞ்சம் இடைவெளி விட்ட செல்வம் தொடர்ந்தார்.
''இமிடா க்ளோபிரிட், தயோமீதாக்ஸைட், அசெட்டமாப்ரைட் மாதிரியான ரசாயனங்களைத்தான் நரம்பு நஞ்சு தயாரிக்கப் பயன்படுத்துறாங்க. இப்போ மக்காச்சோள விதைகளைப் பாத்தீங்கன்னா சிவப்பு கலர்ல இருக்கும். அது இந்த நரம்பு நஞ்சு தடவப்பட்டதுதான். அதே மாதிரிதான் பருத்தி விதையும் இப்போ மார்கெட்ல வந்துட்டு இருக்கு.
“இதுல இன்னொரு விஷயத்தையும் பாக்கணும். பூச்சிகள் பூதாகரமாப் பெருகுறதுக்கு காரணமே, அடிச்ச பூச்சிக்கொல்லியை திரும்ப அடிக்கிறதுதான். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லியை திரும்ப பயன்படுத்தக் கூடாதுங்கிறது பூச்சிக்கட்டுப்பாடுல முக்கியமான விதி. விதையில பவுடரா பயன்படுத்திட்டு அதே விஷத்தை திரும்ப திரவமா செடியில பயன்படுத்துறாங்க. அதனால, பூச்சிகள் ஒழியப்போறதில்லை. மாறாக, அதிக வீரியத்தோட பூச்சிகள் உருவாகிட்டுதான் இருக்கும். இதனால பாதிக்கப்படப்போவது மத்த உயிரினங்கள்தான். இதே நிலைமை நீடிச்சா இன்னும் பத்து தலைமுறை பூச்சிக்கொல்லிகள் வந்தாலும் பூச்சிகளை அழிக்க முடியாது” என்றார் வருத்தத்துடன்.
பூச்சிகளை கட்டுப்படுத்த...
பூச்சிக்கொல்லி விஷங்களுக்காக பணத்தையும் செலவு செய்து, இயற்கையையும் சிதைப்பதை தடுக்க, எளிய வழிகள் நிறையவே உள்ளன. நம் வயலில் உள்ள பூச்சிகளை அழிக்க வேண்டாம். அவையும், இயற்கையின் ஓர் அங்கம்தான். எனவே, பயிர்களின் விளைச்சலை பாதிக்கும் போது, அந்த பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினால் போதும். இதற்கு மூலிகை பூச்சி விரட்டி, இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி போன்றவற்றை பயன்படுத்தலாம். இவற்றுக்கு செலவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜி.பிரபு
ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் உஷார்... உஷார்...
பூ ச்சிக்கொல்லி விஷம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது எண்டோசல்ஃபான்தான். அதைத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல...
Post a Comment