ஆர்.ராஜா, தேனி
'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், ஒரே நாளில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் ஒரு பாடம் படிக்க நினைக்கிறேன். ஆனால் ஒரு பாடம் முடிக்கும்போது அடுத்த பாடம் மறந்து போகிறது. இந்த மறதியைப் போக்க வழி இருக்கிறதா?'
டாக்டர் அபிலாஷா, மனநல நிபுணர், சென்னை
'நல்ல மதிப்பெண்கள் பெற முயற்சி செய்யும் உங்களுக்கு, முதலில் வாழ்த்துகள். எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும்தான். அதற்காக, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் படித்துவிட முடியாது. நமது மூளையில் ஒரு விஷயம் நன்றாகப் பதிவதற்கு சில நொடிகள் எடுத்துக்கொள்ளும். அந்தக் கால அவகாசம்கூட கொடுக்காமல், வெவ்வேறு பாடங்களைப் படிக்க நினைத்தால் எதுவும் மனதில் நிற்காது. ஆரம்பத்தில் படிக்கும்போது, நன்றாக நினைவிருப்பது மாதிரிதான் இருக்கும். போகப் போக அது மறந்துவிடக்கூடும். ஆரம்பத்திலேயே, எதை, எப்படி, எப்போது படிக்க வேண்டும் என பட்டியல் போட்டுப் படிப்பது நல்லது. அப்போதுதான், மூளையில் தகவல்களைச் சரியாகச் சேமிக்க முடியும். ஒரே நாளிலோ அல்லது குறிப்பிட்ட நேரத்துக்
குள்ளாகவோ எல்லா பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வராத அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பாடத்தைப் படிக்கிறோம் என்றால், முதலில் எளிமையான பகுதிகளைப் படியுங்கள். அப்புறம் கடினமாக இருக்கும் பகுதிகளைப் படியுங்கள். எளிமையாக இருக்கும் விஷயத்தை ஊன்றிப் படிக்கும் போது, அது நினைவுத்திறனில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அகலாது.
அடிக்கடி மறந்துவிடுவது ஒரு சாதாரணக் குறைபாடுதான். அதை சுலபமாகத் தாண்டி வர முடியும். படிக்கும் சூழலில் நெருக்கடி வராமல் உங்களின் நேரத்தை சரியாகத் திட்ட மிட்டுப் படியுங்கள். படிப்பது என்பது மூளையில் பதிவாகி இருக்கிறதா இல்லையா என்பது தான் முக்கியம். அதைக் கவனத்தில்கொண்டு படியுங்கள். வெற்றி நிச்சயம்!''
பு.கண்ணன், கோவை
'இரண்டு வருடங்களாக கடுமையான ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறேன். வலி மாத்திரைகளால் நிரந்தரமான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. ஒற்றைத் தலைவலி எதனால் ஏற்படுகிறது? இதை குணமாக்க என்னதான் வழி?'
டாக்டர் முருகன் நரம்பியல் நிபுணர், சென்னை
'பொதுவாக உடல் நலக் குறைபாடு, சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என உடல் நலம் குறையும்போது தலைவலி ஏற்படும். இதுபோன்ற தலைவலி ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.
ஒற்றைத் தலைவலி இதனால் தான் வருகிறதென குறிப்பாக எந்தக் காரணத்தையும் சுட்டிக் காட்ட முடியாது. இருந்தும், மரபியல் காரணங்கள், அதிக வெளிச்சம், இரைச்சல், மன அழுத்தம் என நம் சூழலாலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் ஏதேனும் யோசித்துக்கொண்டே இருப்பதும், அதிகம் வெயிலில் அலைவதும், தேவையற்ற பிரச்னைகளை மனதில் போட்டு உழட்டிக் கொள்வதும், மன அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலிக்கு காரணமாகலாம்.
சாக்லெட் ஐஸ்கிரீம், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் என சாக்லெட் கலந்த பண்டங்களில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயனப் பொருட்களாலும் தலைவலி அதிகரிக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், சிட்ரஸ் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் காபி, டீ, குளிர்பானங்கள், சீஸ், பீட்ஸா, ஜங்க் ஃபுட் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். தினமும் தியானம் செய்யலாம். வாக்கிங், ஜாகிங் போவதும் பலனைக் கொடுக்கும். இவற்றுடன், நிம்மதியான தூக்கம் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வைத் தரும். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி நீடிக்குமானால் நரம்பியல் நிபுணரைக் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.'
படித்த பாடம் மறந்து போகிறதா உங்கள் குழந்தைகளுக்கு? நியாபக மறதியைப் போக்க வழி!
ஆர்.ராஜா, தேனி 'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று விரு...
Post a Comment