நடுவுல கொஞ்சம் பள்ளம்...
இரவு மணி 10.30 ...வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவரிடமிருந்து வந்த அழைப்பு காத்திருப்பில் தெரிகிறது... இந்த நேரத்தில் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் பேசிக்கொண்டிருந்தவரை துண்டித்துவிட்டு “என்ன சார் ... இந்த நேரத்துல? “ என்றேன். எதிர்பக்கம் குரல், நடுக்கத்துடனே பேச ஆரம்பித்தார்... ஏதோ விபரீதம் என்று மட்டும் புரிந்தது.
என்ன சார் ஆச்சு?! என்றவுடன் நடுக்கத்துடனே பேச ஆரம்பித்தார் .. மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் , தலையில் பலமாக அடிபட்டதில் நினைவு தப்பிவிட்டதென்றும் சொன்னவர் கொஞ்சம் உதவிக்கு வரமுடியுமா என்றார். அண்ணா நகரில் உள்ள அந்த மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கிளம்பினேன்.
ப்ளாஷ்பேக்: இரவு மணி 10, கணவன் , மனைவி இருவரும் தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தெரிந்த நண்பர்கள் , உறவினர்கள் என அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்துவிட்டு வீடு திரும்புகையில் அந்த விபத்து நடந்தது… இன்னும் இரண்டு நாளில் நிச்சயதார்த்தம்… இந்த நேரத்தில் இப்படி ஒரு விபத்தை அவர் எதிர்பார்க்கவேயில்லை. அடிபட்டவுடன் என்ன நடந்தது என்றே தெரியவில்லை …
இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார்கள், திடிரெனெ நடுரோட்டில் ஒரு பள்ளம்… அவர் ப்ரேக் பிடிக்கிறார்… பின்னால் உட்கார்ந்துகொண்டு வந்தவர் அதே வேகத்தில் கீழே விழுகிறார், வண்டி ஓட்டியவரும் தடுமாறி இறங்கி மனைவியை தூக்கும்போதுதான் தெரிகிறது அவர் மயங்கிவிட்டார் என்று… பின்மண்டையில் இரத்தம் …. அந்த நேரத்தில் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… அவசர அவசரமாக ஒரு ஆட்டோவை பிடித்து பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்… அவர் சட்டை மீது இரத்தக்கறை… அட்மிட் ஆனவருக்கு தலையில் ஆறு தையல் போட்டு நினைவு வந்ததும் பேசினால்… இரண்டு நாளில் நடக்கப்போகும் பெண் நிச்சயதார்த்தம் பற்றிய நிகழ்ச்சியை பற்றியே அவருக்கு நினைவில்லை என்றபோது இவர் உறைந்துதான் போனார்… அந்த இக்கட்டான நிலமையில்தான் நமக்கு ஃபோன் போட்டு அழைத்துள்ளார்.
போய் சேர்ந்தபோது தையெலெல்லாம் போட்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சென்றுவிட்டார்கள்… அவர்கள் நலமாகிவிடுவார்கள் , நினைத்ததுபோல் இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே காத்துக்கொண்டிருந்தேன். ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் வந்தவர்களுடன் மருத்துவரை சந்தித்தபோது… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது… விழுந்த அதிர்ச்சியில் கொஞ்சநேரம் நினைவுகள் தப்பியிருக்கும்… இனிமேல் எதுவும் பிரச்னை இருக்காது என்று சொன்னதும் நிம்மதியேற்பட்டது. 24 மணிநேரம் அப்சர்வேஷனில் இருக்கவேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் பிரச்னை இல்லை என்று உறுதி செய்துகொண்ட பிறகு வீடு திரும்பினோம்.
இந்த சின்ன பள்ளம், விபத்து ஏற்பட்ட அந்த ரோட்டில் மட்டும்தான் உள்ளதா?! , நாம் அன்றாடம் பயணிக்கும் அத்தனை சாலைகளுமே குண்டும் குழியுமாகத்தான் காட்சியளிக்கிறது. இதுபோல் வெளியே பதிவாகாத விபத்துக்கள் ஆயிரமாயிரம் உண்டு. இதற்கெல்லாம் யார் பொறுப்பு?!
நடுவுல கொஞ்சம் பள்ளம்...
நடுவுல கொஞ்சம் பள்ளம்... இரவு மணி 10.30 ...வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவரிடமிருந்து வந்த அழைப்பு காத்திருப்பில் தெரிகிறது... இந...
Post a Comment