Ads (728x90)

பளிச்...பளிச்...
ஒரு தார் 1,000 ரூபாய்.
அறுவடை செய்து 15 நாள்வரை
இருப்பு வைக்கலாம்.
சுற்று வட்டார வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம்... 'பெரிய வாழைத்தார்...' என்று ஆரம்பித்தாலே போதும், 'ஓ... சுந்தரம் தோப்புல விளைஞ்சதைத்தானே சொல்றீங்க!' என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். அவருடைய தோப்பில் எட்டடி உயரத்துக்கு விளைந்த வாழைத்தார்கள் தேடித்தந்த பெருமை இது!
''நாங்க 50 ஏக்கர்ல விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம். 30 ஏக்கர்ல நெல், 10 ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி பத்து ஏக்கர்ல எப்பவும் மொந்தன் வாழை ரகத்தைத்தான் போடுவோம். 2008-ம் வருஷம் திருச்சியில இருக்குற தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்துல, 'உதயம் திசு வாழை'னு சொல்லி நாலு கன்னுகள இலவசமா கொடுத்தாங்க. அதை நடவு பண்ணினோம். பதினாலு மாசம் வளரக்கூடிய அந்த ரகம், அறுவடையப்போ... ஒவ்வொரு தாரும் எட்டடி உயரத்துலயும் எழுபதுல இருந்து எண்பது கிலோ எடையும் கொண்டதா இருந்துச்சு. அதைப் பாத்து ஊரே அதிசயிச்சுட்டுது.
தாருக்கு 25 சீப்பு!
ஒவ்வொரு தார்லயும் 25 சீப்புக்குக் குறையாம இருந்துச்சு. பழம் நல்ல திரட்சியா இருந்ததால... தாருக்கு 1,000 ரூபாய் வரை விலையும் கிடைச்சது. ரெண்டாம் தழைவுலயும் அதேமாதிரி விலை கிடைச்சதால... கொஞ்சம் அதிக எண்ணிக்கையில கன்னுகள வெச்சுப் பாக்கலாம்னு தோணுச்சு.
ஆராய்ச்சி நிலையத்துல ஒரு கன்னு பத்து ரூபாய்னு 50 கன்னுகளை வாங்கிட்டு வந்து, எட்டு சென்ட்ல நடவு செஞ்சேன். அதைத்தான் இப்போ அறுவடை செய்திருக்கேன்'' என்று அறிமுகம் சொன்ன சுந்தரம், வாழைத் தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்று உதயம் வாழை மரங்களைக் காட்டினார். ஒவ்வொரு மரமும் 25 அடி உயரத்துக்கு வளர்ந்து பசுமை கட்டி செழிப்பாகக் காட்சி அளித்தன.
50 மரம்... 50 ஆயிரம் ரூபாய்!
''தார் வெட்டுற பருவத்துக்கு வந்தாலும், இலையெல்லாம் காயுறதில்லை. அடிப்பகுதி பெருத்து மரம் நல்லா உறுதியா இருக்கு. அறுவடை செஞ்ச பிறகு, பதினஞ்சு நாள் வரைக்கும் வெச்சுருந்தாலும்... பழம் கெட்டுப் போறதில்லை. அதனால, வெச்சுருந்தும் விக்கலாம்.
நான் இயற்கை உரங்களோட, ரசாயன உரங்களையும் கலந்துதான் சாகுபடி பண்ணினேன். எட்டு சென்ட்ல சாகுபடி செய்யுறதுக்கு... உரம், அறுவடை, போக்குவரத்து, கமிஷன் எல்லாம் சேர்த்து 16 ஆயிரத்து
750 ரூபாய் செலவாச்சு. ஒரு தார் 1,000 ரூபாய்னு வித்ததுல... 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. செலவு போக, 33 ஆயிரத்து 250 ரூபாய் லாபம் கிடைச்சுது. இந்த தடவை இன்னும் அதிக கன்னுகள நடலாம்னு இருக்கேன்'' என்று சந்தோஷமாகச் சொன்ன சுந்தரம், எட்டு சென்ட் நிலத்தில், 50 உதயம் வாழைகளுக்கு தான் பயன்படுத்திய சாகுபடி தொழில்நுட்பங்களையும் தந்தார். அவற்றைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்!
சணப்பின் நிழலில் வாழை!
வாழை நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே நுண்ணுரக் கலவை தயார் செய்ய வேண்டும். 250 கிலோ தென்னைநார் கழிவோடு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றில் தலா ஒரு கிலோ அளவுக்கு கலந்து, நிழலில் வைத்து, லேசான ஈரப்பதம் இருக்குமாறு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
அதேபோல, தேர்வு செய்திருக்கும் நிலத்தையும் முன்கூட்டியே உழுது, சணப்பு விதைகளைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (8 சென்ட் நிலத்துக்கு, 3 கிலோ சணப்பு தேவை). 20 நாட்களில் சணப்பு இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் நிழலில்தான் வாழையை நடவு செய்ய வேண்டும்.
9 அடி இடைவெளி!
வரிசைக்கு வரிசை, மரத்துக்கு மரம் ஒன்பது அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் நுண்ணுரக் கலவையை தலா 5 கிலோ வீதம் இட்டு, உதயம் வாழைக் கன்றை நடவு செய்து, மண்ணை நிரப்ப வேண்டும். கையால் மண்ணை அழுத்தக்கூடாது. நடவு செய்தவுடன் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்த 15-ம் நாள், தரையிலிருந்து ஓர் அடி உயரம் விட்டு, சணப்பை அறுத்து, வாழைக் கன்றுகளைச் சுற்றிப் பரப்ப வேண்டும். 20 நாட்கள் கழித்து, பவர் டில்லர் மூலமாக சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
நடவிலிருந்து 3 மாதம் கழித்து, 100 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர்-பாஸ்பேட், 150 கிராம் பொட்டாஷ், 250 கிராம் ஜிப்சம், 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் இட வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இதேபோல ஐந்தாம் மாதத்திலும் உரம் இட வேண்டும்.
நான்காவது மாதத்தில் ஒவ்வொரு மரத்துக்கும் சவுக்குக் குச்சியால் முட்டுக் கொடுக்க வேண்டும். நடவிலிருந்து 3, 5, 6-ம் மாதங்களில்... நுண்ணூட்டக் கலவையைத் தெளிக்க வேண்டும். 10 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி, 10 மில்லி சூடோமோனஸ், 10 மில்லி இயற்கை நுண்ணூட்ட திரவம் இவற்றை 500 மில்லி தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இந்தக் கலவையை மரத்தைச் சுற்றிலும், குறிப்பிட்ட அளவிலான இடங்களில் கடப்பாரையால் ஓங்கி ஒரு குத்துவிட்டு, அந்த துளையில் ஊற்ற வேண்டும். வாடல் நோய் தாக்கினால்... அதற்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்கலாம்.
இயற்கைக் கவர்ச்சிப்பொறி!
நடவு செய்து ஆறாவது மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம் வரை தண்டு மற்றும் கிழங்கு கூன் வண்டுகளின் தாக்குதல் இருக்கலாம். இவற்றை, இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தி விடலாம். அதாவது, பக்கத்து தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழை மரங்களில் சாறு அதிகமுள்ள மரங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றரையடி துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பசைத் தன்மையுள்ள இயற்கைப் பூஞ்சணத்தை உள்புறமாக தடவி, மீண்டும் ஒட்டியநிலையில் தோப்புக்குள் ஆங்காங்கு போட்டு வைத்தால்... அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடைந்துகொண்டு உள்ளே செல்லும் வண்டுகள், அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.
ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் இப்படி பொறி வைக்க வேண்டும். பொறிக்காக வைக்கும் மரம் காய்ந்துவிட்டால், புதிய மரத்தை வைக்க வேண்டும். நடவு செய்த 10-ம் மாதத்தில் தார் விடத் தொடங்கும். அனைத்து சீப்புகளும் வந்தவுடன், பூவை ஒடித்துவிட்டு, தாரைச் சுற்றிலும் நைலான் உறையால் மூடி வைக்க வேண்டும். தாரின் மேல்புறமும், கீழ்புறமும் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இது பனி, வெப்பம் மற்றும் பூச்சிகளிலிருந்து தாரைப் பாதுகாக்கும். 14-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம்.
தொடர்புக்கு,
சுந்தரம், செல்போன்: 91766-29570.
8 சென்டில் 50 ஆயிரம்... திகைக்க வைக்கும் திசு வாழை!

பளிச்...பளிச்... ஒரு தார் 1,000 ரூபாய். அறுவடை செய்து 15 நாள்வரை இருப்பு வைக்கலாம். சுற்று...

Post a Comment