சமீபத்தில் ஒரு சிறுவனை சிவப்பு நிறத்தில் சிறுநீர்
வருவதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனைப்
பரிசோதித்தபோது, எல்லாமும் நன்றாக இருந்ததால், என்ன பிரச்னை என்றே கண்டறிய
முடியாமல் திணறினர் மருத்துவர்கள். அவனுடைய உணவுப் பழக்க வழக்கத்தை
விசாரித்தபோதுதான் காரணம் தெரிந்தது. அந்தச் சிறுவன் சாலையோரக் கடையில்
இனிப்பு வகைகளைச் சாப்பிட்டிருக்கிறான். அதில் சேர்க்கப்பட்ட அதிகப்படியான
செயற்கை நிறங்கள்தான் அவனுக்கு சிவப்பு நிறத்தில் சிறுநீர் வரக் காரணமாக
இருந்திருக்கிறது.
சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால், மஞ்சள்
காமாலை, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காலரா... போன்ற தொற்றுநோய்கள் அதிக
அளவு வருகிறது என்று எவ்வளவுதான் எச்சரித்தாலும், அதற்கு எல்லாம் காது
கொடுத்துக் கேட்காமல், உணவை சாப்பிட, கைக்கும் வாய்க்கும் மட்டுமே சண்டை
போட்டுக் கொள்கிறோம். இந்தியாவில் அதிக அளவு தொற்றுநோய்கள் வருவதற்கு,
சுகாதாரமற்ற சாலையோர உணவை சாப்பிடுவதுத£ன் காரணம் என்று உலகச் சுகாதார
நிறுவனம் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டு, நம்மை அலற வைத்திருக்கிறது.
சுகாதாரமற்ற உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சேலம் அரசு
குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர் ரவிசங்கரிடம் கேட்டோம்.
''நாம் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றால்,
அதில் உள்ள கிருமிகள் மூலம் பல வியாதிகள் நம் வயிற்றைப் பதம்
பார்த்துவிடும். வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை உண்டாகும். அமீபா
கிருமிகளால் வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்படும். குடல்புழுத் தொல்லை
வரும். செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயுக்
கோளாறு... போன்ற பலப் பிரச்னைகளும் ஏற்படும். இந்தக் கடைகளில் சுகாதாரமற்ற
முறையில் தயாரிக்கப்படும் உணவு, அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்
தண்ணீர், உணவுப் பொருட்கள், எண்ணெய்... என அனைத்துமே பாதிப்பை
ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.
உணவை நன்றாக அதன் தன்மைக்கு ஏற்றவாறு சமைக்க வேண்டும்.
அப்போதுதான் அதில் உள்ள நோய்க் கிருமிகள் அழிக்கப்படும். இல்லையென்றால்
உணவே நஞ்சாகிவிடும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக கொத்தமல்லி, கீரை போன்றவை
கால்வாய் ஓரங்களில் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. ஈக்கள் இதன் இலைகளில்
உட்காரும்போது கிருமியை அதில் பரப்பிவிட்டுச் செல்கிறது. எனவே, எந்த ஒரு
காய்கறியையும் கழுவாமல் உணவில் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்படுவதற்கு
வாய்ப்பு அதிகம். குறிப்பாக, கொத்தமல்லித் தழையை அழகுக்காக உணவின் மேல்
தூவித் தருகின்றனர். இதைச் சாப்பிடும்போது அதில் உள்ள கிருமிகள் உடலுக்குள்
செல்வதற்கான வாய்ப்பு அதிகம்.
அடுத்து நம் கவனத்தில் கொள்ளவேண்டியது, இந்த
உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய். சாலை ஓர உணவகங்களில் செலவைக்
குறைப்பதற்காக தரமற்ற, மிகக் குறைந்த விலை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கடைகளில் பார்த்தால் மிகவும் கலங்கலான எண்ணெயில் உணவுப் பொருட்களைப்
பொரித்துக் கொடுப்பார்கள். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும்
மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்தும்போது கெட்ட கொழுப்பின்
அளவு அதிகரித்து இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு
வழிவகுத்துவிடும்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அதிக
அளவில் சுவையூட்டிகள் மற்றும் செயற்கை நிறங்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன.
சிக்கன் 65, கோபி 65 போன்ற சிவக்கச் சிவக்க பொரிக்கப்படும் உணவு வகைகளில்,
இதுபோன்ற செயற்கை நிறங்கள் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனங்கள்
கலந்த உணவைச் சாப்பிடும்போது ஆரம்பத்தில் அஜீரணம், வயிற்றுப் போக்கு,
ரத்தசோகை ஏற்பட்டு, அதே உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது சிறுநீரகமும்
பாதிக்கப்படும். இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும்
அதிகம். பெரியவர்களோ, சிறுவர்களோ யாராக இருந்தாலும் அதிக அளவில் நிறம்
சேர்க்கப்பட்ட உணவைத் தவிர்க்க வேண்டும். அது ரோட்டுக் கடையாக இருந்தாலும்
சரி, நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலும் சரி.
உணவகத்தில் சாப்பிடும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக
நோய் வரும், புற்றுநோய் ஏற்படும் என்று கூறவில்லை. தங்களை எதுவும்
பாதிக்காது என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம். விலை மலிவு என்பதற்காக
கண்ட இடத்தில் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமே!' என்றார்
அக்கறையுடன்.
- செ.திலீபன்,
படங்கள்: தே.தீட்ஷித்
ரோட்டுக்கடை சாப்பாட்டுப் பிரியரா?
சமீபத்தில் ஒரு சிறுவனை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வருவதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனைப் பரிசோதித்தபோது, எல்லாமும் நன...
Post a Comment