"நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!
பெங்களூரு: நிர்பய் ஏவுகணையை போர் விமானத்தின் மூலம் துரத்திச் செல்லும் சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சாதித்து காண்பித்துள்ளது. 'ஏவுகணையை, போர்விமானம் விரட்டிச் செல்லுதல்' என்ற வார்த்தையே தெற்காசிய பிராந்தியத்திற்கு புதியதுதான். ஆனால் அதை கண்முன் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர் நமது விமானப்படையினர்.
கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் மிட்னப்பூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா ராணுவ விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாக்குவார் ரக போர் விமானங்கள் இந்தியாவின் நிர்பய் சூப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக 45 நிமிடங்கள் துரத்தியுள்ளது.
மிகப்பெரிய பயிற்சிக்கு பிறகே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும் என்கிறார் தேஜாஸ் டெஸ்ட் பைலட் ஒருவர். "ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே விமானம் தனது பயணத்தை தொடங்க வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏவுகணை கிளம்பி சென்றுவிடும் என்பதால் அதை பின்தொடர்வது மிகவும் சிரமம். ஆனால் பின்தொடரும் நேரத்தில், ஏவுகணையை சரியான தொலைவில் பின்தொடருவது அவசியம். ஏவுகணையின் வேகத்துக்கு ஏற்ப விமானி தனது விமானத்தின் வேகத்தை உடனடியாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
நமது விமானத்தை ஏவுகணையின் பார்வையில் இருந்து, குறிப்பிட்ட இடைவெளியில் பின்தங்கியபடி பின் தொடர வேண்டும். ஏவுகணையை தாண்டி முன்புறமாக சென்றாலோ, அல்லது அதன் பக்கவாட்டில் சென்றாலோ விமானத்துக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏவுகணைகளை துரத்திச் சென்ற விமானம் ஏவுகணைகளாலே தாக்கப்பட்ட உதாரணங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன.
ஏவுகணையின் செயல்பாடு கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப விமானி தனது வேகத்தை நிர்ணயித்துக் கொண்டே வர வேண்டும்" என்றார் அந்த பைலட்.
முதலில் இந்த சோதனைக்காக 2 சுகோய் ரக விமானங்களை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஜாக்குவார் விமானம் பயன்படுத்தப்பட்டது. மிக் விமானத்தையும் கூட பரிசீலனையில் வைத்திருந்தனர். ஆனால் ஜாகுவாரின் திறன் காரணமாக அது கையில் எடுக்கப்பட்டதாம்.
ஏவுகணையின் செயல்பாடு குறித்த வீடியோ படம், பைலட்டுகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதை பார்த்து ஓரளவுக்கு ஏவுகணையின் போக்கை தெரிந்து கொண்ட பிறகே அவற்றை விரட்டும் பணிக்கு ஆயத்தமாகின்றனர் பைலட்டுகள். நிர்பய் ஏவுகணையின் வேகம், மற்றும் அதன் போக்கையும் ஜாக்குவார் பைலட்டுகள் இப்படித்தான் தெரிந்துகொண்டனராம்.
இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் டாக்டர் கே.தமிழ்மணி இதுகுறித்து கூறுகையில், "நிர்பய் ஏவப்பட்டபோது, விமானப்படை மற்றும் கடல்படை ஆகியவை இணைந்து ஒருங்கிணைப்பை தந்தன. ஏவுகணையை துரத்திச் செல்லும் விமானத்திற்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட இரு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஒருங்கிணைப்பு காரணமாகவே நிர்பய் ஏவுகணையை துரத்திச் செல்லும் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது" என்றார். நிர்பய் ஏவுகணையை உருவாக்கிய ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநரான பி.ஸ்ரீகுமார் கூறுகையில், நிர்பய் வெற்றியை போலவே, விமானத்தால் அதை பின்தொடர முடிந்ததையும் ஒரு வெற்றியாகவே பார்க்கிறோம் என்றார்.
அதே நேரம் ஏவுகணையின் முழு தூரத்தையும் ஜாக்குவார் பின்தொடர்ந்து முடிக்கவில்லை. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 45வது நிமிடத்தில் தனது பயணத்தை ஜாக்குவார் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
"நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!
"நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்! பெங்களூரு: நிர்பய் ஏவுகணையை போர் விமானத்...
Post a Comment