ஜெயலலிதா வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி
குன்ஹா அளித்த 1,232 பக்க முழு தீர்ப்பையும் பெற்றுள்ள ‘தி இந்து’, அதன்
முக்கியமான 10 அம்சங்களை இங்கே சுருக்கி அளிக்கிறது.
1. பூதமாக வளர்ந்த சொத்துகள்!
ஜெயலலிதா தனது முதல்வர் பதவிக்காலத்தை (1991-1996) தொடங்கும்போது அவரது
சொத்து மதிப்பு ரூ. 2.18 கோடி. இதில் அவர் பங்குதாரராக இருந்த ஜெயா
பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் சொத்துகளும் அடங்கும். பதவிக்காலத்தில்
அவருடைய சட்டப்பூர்வமான வருமானம் ரூ.9.91 கோடி. ஆனால், பதவிக்காலத்தின்
முடிவில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.53. 60 கோடி. இந்த மதிப்பு 1991-96-ல்
இந்த வழக்கின் எதிரிகள் என்ன விலைக்கு வாங்கினார்களோ அந்த
மதிப்புக்குத்தான் கணக்கிடப்பட்டுள்ளது.
2. கணக்கு காட்ட முடியவில்லை!
முதல்வராகப் பதவியேற்ற முதல் 27 மாதங்களில் மாதம் வெறும் ஒரு ரூபாய்
மட்டும் அடையாள வருமானமாக ஜெயலலிதா பெற்றிருக்கிறார். நடிகை என்ற வகையில்
அவர் சொத்து சேர்த்திருக்க முடியும் என்றாலும், அவர் பெயரிலான
சொத்துகளுக்கு விளக்கம் தர அது போதுமானதாக இல்லை. அவருடன் சேர்த்து
குற்றஞ்சாட்டப்பட்ட இதர 3 எதிரிகளும் எந்த வேலைக்கும் செல்லவில்லை,
அவர்களுக்கென்று ஊதியமும் இல்லை.
3. நம்ப முடியவில்லை மூவரின் நடவடிக்கைகள்!
சொத்துகளை வாங்குவதற்கான பணம் ஏனைய மூன்று பேரிடமிருந்துதான் வந்தது,
ஜெயலலிதாவுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று ஜெயலலிதா தரப்பில்
வாதாடப்பட்டது. முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்குத் தனது வீட்டிலேயே
வசிக்கும் மூன்று பேருடைய நடவடிக்கைகள் தெரியாது என்பதை நம்ப முடியவில்லை.
அந்த மூன்று பேருக்கும் வருமானம் ஏதும் கிடையாது என்னும்போது அது
ஜெயலலிதாவுடைய பணம்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
4. மூன்று பேரின் பங்கு!
சுதாகரனும் இளவரசியும் 1991 முதல் 1996 வரையில் ஆறு நிறுவனங்களில்
இயக்குநர்களாகச் சேர்ந்துள்ளனர். 1991 முதலே இந்த நிறுவனங்கள் இருந்தாலும்
எதிரிகள் இதில் சேர்ந்த பிறகுதான் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதே
காலத்தில் ஏற்பட்ட 18 நிறுவனங்களில் குறிப்பிடத் தக்க வரவு-செலவு
நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. ஆனால், பெரிய அளவில் நிலங்கள்
வாங்கப்பட்டுள்ளன. அதற்கான பணம் ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து
தரப்பட்டிருக்கிறது.
5. பணம் அள்ளிவிடப்பட்ட ஆடம்பரத் திருமணம்!
திருமணத்துக்கு முன்னதாக சுதாகரனை வளர்ப்பு மகன் என்று ஜெயலலிதாவே
அறிவித்திருக்கிறார். திருமணத்துக்காகப் பந்தல் அமைத்தது முதல் திருமணச்
சடங்குகளை நடத்தியது, திருமணத்துக்கான பொருட்களை வாங்கியது என்று
எல்லாவற்றுக்கும் ஜெயலலிதாதான் செலவிட்டிருக்கிறார். பெண்ணின் தகப்பனார் 14
லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். திருமணத்துக்கு நான் செலவிடவில்லை
என்று ஜெயலலிதா கூறியிருந்தாலும், 1996-97-ம் ஆண்டுக்கான வருமான வரிக்
கணக்கில் திருமணத்துக்காக ரூ.29.92 லட்சம் செலவிட்டதாகக் கணக்கு
காட்டியிருக்கிறார். எல்லா மூல ஆவணங்களும் ரசீதுகளும் காசோலைகளும்
ஜெயலலிதாவின் தணிக்கையாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்தே முழுச் செலவையும் அவர்தான் செய்திருக்கிறார் என்பது
நிரூபணமாகிறது. திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, விருந்து
சாப்பிட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், திருமணச் செலவு ரூ.6.45
கோடியைக்கூடத் தாண்டியிருக்கும் என்றாலும், ஜெயலலிதாவின் பங்குக்குச்
செய்யப்பட்ட செலவு எப்படியும் ரூ.3 கோடி இருக்கும்.
6. செருப்பு, புடவைகள் கணக்கு என்ன?
ஜெயலலிதாவின் வீட்டில் 386 ஜோடி செருப்புகள், 914 பட்டுப்புடவைகள், 6,195
இதர புடவைகள், 2,140 பழைய புடவைகள், இதர ஆடைகள் ஆகியவை தொடர்பாக ஊழல்
தடுப்பு இயக்குநரகம் அளித்த கணக்கு தள்ளுபடிசெய்யப்படுகிறது. இவையெல்லாம்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் வாங்கினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
அதேவேளையில், மொத்தமிருந்த 27.588 கிலோ தங்க நகைகளில் சுமார் 20 கிலோ
வருவாய்க்குப் பொருந்தாதவை.
7. கருணைக்கு வழி இல்லை!
இந்த வழக்கு அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது என்றும் 18 ஆண்டுகள்
கடந்துவிட்டது என்றும் இந்தக் காலகட்டத்தில் மன உளைச்சலும் வேதனையும்
அடைந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு
தொடரப்பட்ட பிறகு, ஜெயலலிதா 11 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துவருவதாகவும்
இப்போது அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென்றும் வாதிட்டுள்ளனர்.
மேலும், உடல்நலக்குறைவு காரணமாகக் கருணை காட்டுமாறும் கோரியுள்ளனர். இந்தக்
காரணங்கள் எதுவும் கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல. இந்த வழக்கு 18
ஆண்டுகளாகத் தாமதமானதற்கு யார் காரணம் என்று இப்போது ஆராய வேண்டியதில்லை.
நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு
எழுந்ததால்தான், வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப்பட்டது. 5
ஆண்டுகளுக்கு வழக்குக்குத் தடை இருந்ததிலும் சந்தேகம் இல்லை. ஆனால், அதன்
பிறகும் குற்றவாளிகள் சட்ட நடைமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி, கணிசமான நேரத்தை வீணடித்தனர். குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட
நேரத்தையும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும் தவிர, பிற
நாட்களில் குற்றவாளிகள் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு நிலுவையில் இருந்ததால்
தாங்கள் மனவேதனை அடைந்ததாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
8. கனிவுக்கு வழியில்லை!
ஊழல் செய்த அரசு ஊழியருக்கு ஓராண்டுக்குக் குறையாமலும், 7 ஆண்டுகளுக்கு
மிகாமலும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்
13(2)வது பிரிவு வகை செய்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. மிக
உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு ஜெயலலிதா இந்தச் செயலில் ஈடுபட்டதுதான்
குற்றத்தின் தன்மையை அதிகரிக்கிறது. ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்று
பழமொழியுள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களின் தவறுகள் மீது கனிவோ இரக்கமோ
காட்டினால், அது ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும் என்று
கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, இந்த
வழக்கில் கனிவுக்கோ அனுதாபத்துக்கோ இடமில்லை.
9. தண்டனையின் அளவுகோல்!
குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் மதிப்பு, அவை பெறப்பட்ட முறை ஆகியவற்றின்
அடிப்படையில்தான் தண்டனையைத் தீர்மானிக்க முடியும். அப்படிப்
பார்க்கும்போது, இது கடுமையான தண்டனைக்குரியது. சட்டம் வழங்கியுள்ள
அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டுகள்) பாதிக்குமேல் விதித்தால்தான் நீதி
நிலைநாட்டப்படும் என்பதால், நான்கு ஆண்டுகள் விதிக்கப்படுகிறது.
10. ஊழலை எப்படி அளவிடுவது?
ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின்
தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது, தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது,
மனசாட்சியைக் கொல்கிறது, மனித நாகரிகத்தையே குலைக்கிறது!
தொகுப்பு- ஜூரி
-THE HINDU-
நீதிபதி குன்ஹா தீர்ப்பு: 10 முக்கியக் குறிப்புகள்!
ஜெயலலிதா வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த 1,232 பக்க முழு தீர்ப்பையும் பெற்றுள்ள ‘தி இந்து’, அதன் முக்க...
Post a Comment