பெங்களுரு சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டபோது ஆரம்பத்தில் சித்தராமய்யா அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக முளைக்கும் புதுப்புது பிரச்சினைகளால், வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்டுக்கொண்டோமோ என்று விழிபிதுங்க ஆரம்பித்துள்ளது.
முதலமைச்சர் சித்தராமய்யா, மாநில உள்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் நிம்மதியாக இல்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் இருந்து பெங்களுருக்கு தினமும் அதிமுகவினர் கொத்துக்கொத்தாக படையெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் அதிமுகவினர் முகாமிட்டுக் கொண்டு எப்போதுமே பதற்றமாக வைத்துள்ளனர். இதெல்லாம், முதலமைச்சர் சித்தராமய்யாவை, எரிச்சல் அடையச்செய்துள்ளது.
இது தவிர, பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசாரை ஈடுபடுத்த வேண்டியுள்ளது 24 மணிநேரமும் வாகனங்கள் ரோந்து, உயர் அதிகாரிகள் விசிட், நேரடி கண்காணிப்பு என ஏகப்பட்ட விஷயங்களுக்கு நிறைய செலவாகிறது. இதனால்இதெல்லாம் நமக்கு தேவையா, என்று அலுத்துக்கொள்கிறார் சித்தராமய்யா.
ஏற்கனவே தமிழ்நாட்டுடன் கர்நாடகத்துக்கு காவிரிப்பிரச்சினையால் சுமூக உறவு இல்லாத சூழ்நிலை. இப்போது ஜெயலலிதா விவகாரம் வேறு மாதிரி பகையை உருவாக்கிவிடுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்துள்ளார் அவர்.
இன்னொரு பக்கம், மாநில உள்துறை அமைச்சர் ஜோசப், கடுமையான எரிச்சலில் இருக்கிறார். காரணம் சிறைத்துறை விதிகளை பின்பற்றுவதா வேண்டமா என்கிற குழப்பம்தான்.
தண்டனை கைதியான ஜெயலலிதாவுக்கு உடனே சிறையில் கைதிக்கான ஆடைகளை கொடுத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி கொடுத்தால், தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படலாம் என்கிற தயக்கத்தில் அந்த விதியை பின்பற்றவில்லை. அதேபோல, சிறையில் ஏதாவது ஒரு வேலையை ஒதுக்கித் தந்திருக்கவேண்டும். அதையும் செய்ய முடியவில்லை.
வெளியிலிருந்து உணவு கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது. இதையும் நிறுத்த முடியவில்லை. சிறை சாப்பாட்டால் ஏதாவது கோளாறு ஏற்பட்டு ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டால்..? ஏற்கனவே அவரது உடல்நிலை பற்றி அடிக்கடி வதந்தியை கிளப்பிவிட்டுவிடுகின்றனர். இப்படி விதவிதமான நெருக்கடிகள்.
இந்த நிலையில் சிறை விதிமீறல்கள் பற்றி பெரிய அளவில் கேள்விகள் எழுந்து சர்ச்சை வெடிக்குமோ என்று கலக்கத்தில் இருக்கிறார் ஜோசப்.
ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நிறுத்தக்கோரி, சட்டத்தின் உதவியை நாடினால் என்ன செய்வது என்பதும் ஜோசப்பின் அச்சமாக உள்ளது.
அதாவது சட்டப்படி நடத்தினால் தமிழகத்தின் எதிர்ப்பை பெரிய அளவில் சந்திக்கவேண்டியிருக்கும். விதிகளை பின்பற்றாவிட்டால், ஜெயலலிதாவுக்கு சலுகை காட்டுகிறார்கள் என்று லோக்கல் பாலிடிக்ஸ் ஆரம்பமாகும்.
ஜெயலலிதா விவகாரம் இப்படி இடியாப்ப சிக்கலாக மாறிவிட்டதால், முதலில் அவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைத்துவிட கர்நாடக அரசு தீவிரமாக யோசித்துவருகிறது.
ஜெயலலிதாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்ற அனுமதிகேட்டு மத்திய அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதவும் சித்தராமய்யா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், ஜாமீன் மனுவை எதிர்க்கும் விஷயத்தில் கர்நாடக அரசு தரப்பு கடுமை காட்டாது என்றே தெரிகிறது.
ஜாமீன் வாங்கிக்கொண்டு ஜெயலலிதா பெங்களுரூவை விட்டுவிட்டு போனால் போதும் என்று நிலைக்கு கர்நாடக அரசு வந்துவிட்டுள்ளது என்பதுதான் இப்போதைய நிலைமை..
ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்க கர்நாடக அதிரடி முடிவு-புதிய தகவல்கள்
பெங்களுரு சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டபோது ஆரம்பத்தில் சித்தராமய்யா அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக முளைக்கும் புது...
Post a Comment