இதை உறுதி செய்யும் விதமாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏழை, பணக்காரன் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாகவும், ஏழைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, பொருளாதார ஆணையம் (யுஎன்-இஎஸ்சிஏபி - United Nations - Economic and Social Commission for Asia and Pacific) தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளின் மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் ஏழைகளாக உள்ளனர். இவர்களில் 10 சதவிகிதம் பேர் தேசிய சராசரி வருமான அளவில் 10 சதவிகிதத்தையே ஊதியமாக பெறுகின்றனர் என இந்த ஆய்வறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 40 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்றத்தாழ்வு விகிதம்
இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வருமானத்தில் அதிக அளவு ஏற்றத்தாழ்வு நிலவுவதாக இந்த ஆய்வறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. வருமானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கிடுவதற்கு 1990-2000 ஆண்டு வரையிலான காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தப் பத்து ஆண்டுகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு விகிதம் இந்தியாவில் 30.8 புள்ளியிலிருந்து 33.9 புள்ளியாக உயர்ந்துள்ளது. சீனாவில் இது 32.4லிருந்து 42.1 புள்ளியாக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் இது 29.2 புள்ளியிலிருந்து 38.1 புள்ளியாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் கம்போடியா, கிர்கிஸ்தான், மலேசியா, நேபால், பிலிபைன்ஸ், தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பது, போதிய அளவில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காதது. கல்வித் தரம் குறைவாக இருப்பது, கடன் கிடைப்பதில் சிரமம், ஒரு சாரார் அதிக அளவில் அசையா சொத்துகளில் முதலீடு செய்து வைத்திருப்பது உள்ளிட்ட விஷயங்கள்தான் ஏற்றத்தாழ்வுக்குக் காரணங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் அதிக சொத்து (184.83 கோடி ரூபாய்க்கு மேல்) உள்ள தனி நபர் எண்ணிக்கை அளவு 30 சதவிகிதமாக உள்ளது. சொத்து குவிக்கும் போக்கு அதிகரித்ததே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாகும்.
ஏழை, பணக்காரர்கள் சதவிகிதம்
சொத்து, வருமானம் அதிகரித்ததற்கு நாட்டின் மொத்த வருவாய் அதிகரிப்பும் முக்கியக் காரணமாகும். இதனால் பணக்காரர்கள் ஒரு சதவிகிதம் இருந்தால் ஏழைகளின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக உள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏற்றத்தாழ்வு என்பது இங்கு நிலவும் மிக முக்கியமான சமூக, பொருளாதார பிரச்னையாகும்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியங்களில் பெருநகரங்களில் வருமானத்தில் பெருமளவு ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும், ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது சமூகத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப் பெரிய சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்த ஆய்வறிக்கை மூலம் எச்சரித்திருக்கிறது.
காரணம் என்ன?
அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்று சேராததால் அவர்களால் முறையாக முன்னேற முடிவதில்லை. உதாரணத்துக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை மக்களுக்கு கிடைக்கும் போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி செலவு செய்யும் பணத்தை சேமிப்புக்கு பயன்படுத்துவதன் மூலம் ஏழைகளும், நடுத்தர மக்களும் நிச்சயமாக பொருளாதார அடிப்படையில் அவர்களை உயர்த்திக் கொள்ள முடியும்.
அதே போல வெளியூர்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் சரியான வசதிகள் செய்து தராததாலும் எல்லா நேரங்களிலும் சரியாக பேருந்துகள் இயக்கப்படாததாலும் மக்கள் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளாலும் சாதாரண மக்களின் பொருளாதார முன்னேற்றம் தடைபடுகிறது. பணக்காரர்களாக இருப்பவர்கள் எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கும் தன்மையுடனும், ஏழைகளால் அதை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தாத சூழ்நிலையும் உருவாகியுள்ளதால் இன்று இவ்விரு தரப்பினர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.
திறனற்ற அரசு
சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம சீனுவாசன், "ஏழை, பணக்காரர்கள் இடையே இடைவெளி அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் முதலாவது அரசின் திறனற்ற தன்மை. மற்றொன்று தான் வர்த்தகத்திற்கு விடும் பொருட்கள் மூலம் தயாரிப்பாளர்கள் ஏழை, எளிய மக்களை சுரண்டும் சூழல் நம் நாட்டில் இருப்பது. நமது அரசாங்கம் ஏழை மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேராத வரை இந்த ஏற்றத்தாழ்வானது குறையாது. அதேபோல நுகர்வோர்களை சுரண்டும் சூழ்நிலையானதும் மாறவேண்டும். இதற்கான நடவடிக்கையையும் நம் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
மக்கள் சொத்து
பங்குச் சந்தை நிபுணர் மற்றும் நிதி ஆலோசகர் வி.நாகப்பன், "ஏழை, பணக்காரர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்க மிக முக்கியமான காரணம் மக்களின் சொத்துக்கள் அரசாங்கத்தால் சரியாக கையாளப்படவில்லை என்பதுதான். 1993-94ல் அரசு ஆரம்பித்த திட்டமான 'முதலில் முந்துபவருக்கே முன்னுரிமை" என்பதும் இந்த சூழ்நிலை உருவானதில் பெரும்பங்கை வகிக்கிறது. ஒரு நாட்டில் ஏழைகளே இருக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவர்களின் விகிதம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதேபோல மேல்தட்டு மக்களும் ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே இருக்க வேண்டும். இவர்களுக்கு இடைப்பட்ட நடுத்தரவர்க்கத்தினரே அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியம். இப்படி இருக்கும்பட்சத்தில் ஏழை, பணக்காரர்களுக்கான ஏற்றத்தாழ்வு விகிதமானது குறைந்து காணப்படும்" என்றார்.
அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியாக அரசின் நடவடிக்கை அமையும் பட்சத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும்!
Nandri:Vikatan
ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்?
"ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்; பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்" என்பது நம் நாட்டில் மக்கள் பேசு...
Post a Comment