முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள்.
இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள். சரவண பவன் சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன்.
சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர். சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள். ஆறுமுகம் சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது.
சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு. குகன் மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன். குமாரன் கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.
கந்தன் கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள். விசாகன் விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது.
ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள். வேலன் வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான். குருநாதன் பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார். சுப்பிரமணியம் சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர்.
ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது. வேறு சில பெயர்கள் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. -\====================================== -சித்ரா பலவேசம்
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகன...
Post a Comment