ஒரு போரளியின் குருதிச் சுவடுகள்
லெப் கேணல் குமரப்பாவின் நினைவு தடங்கள்
குமரப்பாவிற்கு, அமைப்புக்கு வந்தபோது அவரின் சொந்தப் பெயரான இரத்தினபாலன் (பாபு) என்பதற்கு பதிலான இயக்கப் பெயராக தலைவரால் ‘குமரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. இயல்பாகவே கலகலப்பானவர் குமரப்பா. பழகும் யாருடனும் அன்னியோன்னியமாகவும், எதிரே அமர்ந்திருப்பவரின் மனதுக்கு நெருக்கமாகவும் பழகும் திறன்மிகுந்தவர். திடகாத்திரமான உடற்கட்டு இவருக்கு இயற்கையாகவே இருந்திருந்தது.1978களின் இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். இருபதுக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்த ஆரம்ப காலத்திலேயே அமைப்பில் தன்னை இணைத்தவர்.
தேடல் நிறைந்த ஒரு ஆன்மா குமரப்பா. எந்த நேரமும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இருப்பார். உலக நடப்புகளை அறிவதிலும், அதனை பற்றி நண்பர்களுடன் ஆராய்வதிலும் இவருக்கு சளைப்பில்லாத ஈடுபாடு எப்போதும் இருந்துவந்திருக்கிறது.
அமைப்பில் இணைந்த பொழுதினில் அமைப்பின் பண்ணை முறைக்குள் இவரும் உள் எடுக்கப்பட்டு அந்தநேரம் இயங்கிவந்த அமைப்பின் பண்ணைகளில் ‘நம்பர் திறீ’ என்று அழைக்கப்பட்ட புளியங்குளம் பகுதியில் அமைந்திருந்த விவசாயபண்ணைக்கு அனுப்பப்பட்டார். அந்த 79ம் ஆண்டுப் பகுதியில் அமைப்பின் பண்ணை முறை என்பது ஒருவிதமான பரீட்சைக்களமாக ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறது. குமரப்பாவுக்கும்தான்.
சாதாரண விவசாயப் பண்ணைகள் போன்ற தோற்றத்திலேயே இவையும் இருக்கும். ஒவ்வொரு பண்ணையிலும். ஏழு, எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். அவற்றின் தினசரி நேர அட்டவணை மிகவும் கடினமானது.
அதிகாலை துயில் எழுப்பல். அதன்பிறகு சிறிது உடற்பயிற்சி. அதன் பின்னர் விவசாய நிலத்தில் வேலைகள். களை பிடுங்குவது. டிஸ் அடிப்பது. மத்து வெட்டுவது, தண்ணி பாய்ச்சுவது என்று ஏராளம். மாலையில் புத்தகம் படிக்கவேணும். இப்படி ஏராளம் கட்டுப்பாடுகளுக்குள்ளாக தேறுபவர்களே அடுத்த அடுத்த பண்ணைகளுக்கு உள் எடுக்கப்படுவார்கள்.
குமரப்பாவுக்கு இயல்பாகவே இருந்த அன்னியோன்னியமாக பழகும் தன்மையும் நட்புடன் இணையும் பழக்கமும் அவர் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பானதாக ஆக்கியபடியே இருந்தன. எல்லா வேலையையும் அழகாகவும் அதேநேரம் வேகமாகவும் செய்யும் திறனும் அவரிடத்தில் இருந்திருந்தது.
அந்த ஆரம்பகாலப் பொழுதிலேயே செய்திகளையும்,பிற போராட்ட வரலாறுகளையும் ஆவணப்படுத்துவதில் தன்னார்வத்துடன் செயற்பட்டவர் குமரப்பா. அவர் இருந்த முகாமுக்கு (பண்ணை) 1979,80களில் வந்த ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளில் விடுதலை சம்பந்தமான ஆக்கங்களை அழகாக கத்திரித்து ஒட்டிவைத்திருந்தவர் அவர். எந்த வரலாற்று நிகழ்வானாலும் அதனை ஆண்டு திகதி என்று மிகத்துல்லியமாக தெரிவிக்கக்கூடிய நினைவாற்றல் குமரனின் ஆளுமைகளில் முக்கியமானது.
79,80களில் பண்ணையில் இருக்கும்போது அவர் அதிகமாக படித்தது ‘தான்பிரின்’,மைக்கல் கொலின்ஸ்’ என்ற இரண்டு அயர்லாந்து விடுதலைப்போராட்ட வீரர்களின் வரலாறாகும். ஆரம்ப காலங்களில் குமரப்பாவின் ஆதர்ச போராளிகளாக அவர்களே விளங்கினர்.
காலம் மிகவும் வேடிக்கையானதும்கூட. 80களின் ஆரம்பத்தில் அமைப்புக்குள் குழப்பவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட உடைவால் மனம் உடைந்து குமரப்பா அயர்லாந்துக்கே தொலைத்தொடர்பு படிக்க போக நேர்ந்தது. அயர்லாந்து சென்றதும் அவர் எழுதிய கடிதத்தில் எதை எதை அவர் தான்பிரின்,’மைக்கல் கொலின்ஸ் வரலாற்றில் படித்தாரோ அந்த இடங்களையே நேரடியாக தான்போய் பார்த்ததாக பரவசத்துடன் தெரிவித்திருந்தார்.
அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை. அங்கும் தமிழ் மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையை சொல்லியபடியே இருந்தார். எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத்தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது.
1983 யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு கட்டவிழத்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்டம் பற்றியும் சிங்கள அரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக் கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார். அதன் பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார். இந்திய மண்ணுக்கு வந்து இந்திய மண்ணில் இடம்பெற்ற இரண்டாவது பயிற்சி முகாமில் தனது இராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டார். இத்துடன் தனக்கு இருந்த சரளமாக பேசக்கூடிய ஆங்கில அறிவால் அமைப்புக்கு மொளிபெயர்பாலராகவும் செயற்பட்டார்.
தமிழ் ஈழ விடுதலை போராளிகளில் RPG உந்துகணை குறி தவறாமல் செலுத்துவதில் திறமையானவர். இதனால் யாழ், மன்னார், திருகோணமலை குச்சவெளி, மட்டக்களப்பு ஏறாவூர் போன்ற இடங்களில் அமைந்திருந்த ஸ்ரீலங்கா போலீஸ் நிலைய தாக்குதல்களில் இம் வீரமிகு தளபதியின் பங்கு அளப்பரியது. அந்த கால பகுதிகளில் தமிழ் ஈழ அனைத்து மாவட்ட தாக்குதல்களிலும் நேரடியாக பங்கு பற்றிய பெருமை இவரையே சாரும்.
மீண்டும் அமைப்புக்குள் இணைந்த குமரப்பா அனைத்து தளங்களிலும் தனது ஈடுபாட்டையும் ஓய்வின்றிய வேலைகளையும் செய்தவராவார். தலைவரின் பாதுகாப்பு, பயிற்சி முகாம்கள், தமிழக அரசியல் தொடர்புகள், ஊடகவியலாளர் சந்திப்புகள் என்று எந்த நேரமும் ஓய்வின்றியே அவர் 83லும் 84 ஆரம்பத்திலும் தமிழகத்தில் இயங்கினார்.
தளபதி அருணா அண்ணாவின் பெயர்வுக்கு பின் 27.04.1986 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஈழத்தின் தென் பகுதியான மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக ஏப்ரல் 1987 வரை நின்று பல களங்கள் கண்டு மகிழடித்தீவில் தனக்கு பிடித்த வாழ்க்கை துணையையும் தேடி கொண்டார். யாழ் மாவட்டத்தில் இடம் பெற்ற " லிபரேசன் ஆபரேஷன் " இக்கு தனது படையணியையும் கொண்டு யாழ் மண்ணை நோக்கி பயணித்தார் குமரப்பா. இவர் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த போதுதான் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முதல் கரும்புலி தாக்குதல் நெல்லியடியில் கப்டன்.மில்லரால் நடத்தப்பட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 05 .09 .1987 இந்திய இராணுவத்தின் உலங்கு வானூர்தியில் அழைத்து எடுக்கப்பட்ட தனது காதலி ரஜனிக்கும் இவருக்கும் திருமணம் நடந்தேறியது.
அதன் பின்னர் தமிழீழ களத்தில் சென்று இறங்கி குமரப்பா தனது இறுதிநாள் வரைக்கும் எதிரிக்கும், எதிரிக்கு துணைபோகும் சக்திகளுக்கும் எதிரான சமர்கள் அனைத்திலும் பெரும் தீயாக, புயலாக நின்று களமாடி இருக்கிறார். திருமணம் நடந்து மாலை காயும் முன்பே, சில தீய சக்திகளின் செயலால் 12 விடுதலை வீரர்களும் நஞ்சு அருந்தி வீர காவியம் ஆகினர்.
ஒரு போரளியின் குருதிச் சுவடுகள் லெப் கேணல் குமரப்பாவின் நினைவு தடங்கள்
ஒரு போரளியின் குருதிச் சுவடுகள் லெப் கேணல் குமரப்பாவின் நினைவு தடங்கள் குமரப்பாவிற்கு, அமைப்புக்கு வந்தபோது அவரின் சொந்தப் பெயரான இரத்...

Post a Comment