17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்து...
17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்துவைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
1. முட்டாள்கள் தின காமெடி!
1995, ஏப்ரல் 1...
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்! ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். 'இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி.
2. 'மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!’
''இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி.
3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!
'ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்!
4. 'ராஜினாமா பெஸ்ட்!’
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, 'ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்.
முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, 'அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை ராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா!
5. மலையெனக் குவிந்த புகார்கள்!
1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள்கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன!
6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!
'தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்றார்.
நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார்.
7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!
1995, ஏப்ரல் 20 அன்று ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர். சுவாமி வரவும் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன. அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி. இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. 'ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என உத்தரவிட்டது உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்!
8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார்.
அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.
10. மாறியது காட்சி!
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவற்றை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என சுரீர் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் பதவி பறிபோக, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். பிறகு டான்சி வழக்கில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.
11. வழக்கு பெங்களூருவுக்கு பார்சல்!
'தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால் வழக்கை தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று, வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால் வழக்கை சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள்.
13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன.
14. லண்டன் சிக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன் வழக்கு இதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன் சொத்துக்குவிப்பு வழக்கையும் பெங்களூரு வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூரு வழக்கு விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன!
15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்!
சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு வழக்கு, 'இந்த வழக்கு விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு வழக்கு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது.
இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது!
16. பெங்களூருலேயே பல்டி விளையாட்டு!
2013 ஜனவரி 17 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சாரியா பதவி விலகினார். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வுபெற்று, புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்புக்கு வந்தார். அரசு வழக்குரைஞராக பவானி சிங் பொறுப்பெடுத்துக்கொண்டார். அந்தச் சமயம் வழக்கின் காட்சிகள் மாறின. பவானி சிங்கின் அணுகுமுறை ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு பேராசிரியர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு அவரை மாற்றியது. பவானி சிங் மாற்றத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. பவானி சிங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தச் சமயம்தான் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பு எடுத்துக்கொண்டார்.
17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!
பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார். வழக்கை விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். இந்த வழக்கில் 32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். 'எங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். '17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது.
மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார்.
அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!
17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!
Related Posts
- Anonymous29 Dec 2014வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலி...
- Anonymous27 Dec 2014மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்?
வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள். அத் தனை நிஜம் இந்த வார்த்தைகள...
- Anonymous25 Dec 2014இந்த இறைச்சிக்கடையில் என்னவெல்லாம் விற்கிறாங்கள்? (((இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)))
இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை… காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக ...
- Anonymous24 Dec 2014கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்
கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் • கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்க...
- Anonymous18 Dec 2014பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மலாலா கண்டனம்
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க த...
- Anonymous04 Nov 2014சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது! 4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!
சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதா...
- Anonymous06 Oct 2014புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் !
புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் ! தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதைய சட்ட சி...
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment